இந்த ஆண்டின் பிற்பகுதிக்கான மின்சார கட்டண திருத்தத்தின்படி மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும், ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்த மின்சாரக் கட்டணங்களை விட அது குறைவாக இருக்கும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தத்துக்கமைய, இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்ததை விட மின்சார கட்டணம் சுமார் 5.4 சதவீதம் குறைவடையும் என இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் அரையாண்டில், மின்சார நுகர்வோருக்கு நிவாரணமாக மின்சாரக் கட்டணங்களில் 20 சதவீதக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், இதன் விளைவாக, ஒரு அலகு மின்சாரத்தின் சராசரி கட்டணம் 24 ரூபாய் வரை குறைவடைந்தது.
எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணங்களை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை நேற்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்மொழிந்திருந்தது.
கடந்த ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட மின்சார கட்டணக் குறைப்பின் தாக்கம் உட்பட, ஆணைக்குழுவுக்கு 8 ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.
அத்துடன், அண்மையில் சர்வதேச நாணய நிதியம், செலவுகளை ஈடுகட்ட மின்சாரக் கட்டணங்களை உடனடியாக மறுசீரமைக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
இந்தப் பின்னணியில்தான், மின்சாரக் கட்டணங்களை 18.3 சதவீதம் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.