ஈரான், தனது அணு உலை வசதிகள் மீது அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுடனான தொலைபேசி உரையாடலில், நேற்று நடந்த இந்தத் தாக்குதல்களை சர்வதேச குற்றமாக குறிப்பிட்டுள்ளதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமைதி காலத்தில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், ஒரு நாட்டின் அணு உலை வசதிகளைத் தாக்குவது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், அமைதி மற்றும் உரையாடலை விரும்புவதாகக் கூறப்படும் உரிமைகோரல்களின் வெறுமையை அம்பலப்படுத்துவதாகவும் பெசெஷ்கியான் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் தனது அணு உலை திறனை பூஜ்ஜியமாகக் குறைக்காது என்றும், ஆக்கிரமிப்புக்கு பதிலடியாக ஈரானின் ஆரம்பத் தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் மக்ரோனிடம் எச்சரித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிற உலகத் தலைவர்களுடனான உரையாடல்களிலும், அணு உலை வசதிகளை இலக்கு வைப்பது சட்டவிரோதமானது என்று பெசெஷ்கியான் மீண்டும் கூறியுள்ளார்.
இதேவேளை ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து உலகின் பல நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக டோக்கியோ, ஏதென்ஸ், மணிலா, கராச்சி, நியூயார்க், டொரொன்டோ ஆகிய உலகின் மிக முக்கிய நகரங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடெம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
