எதிர்வரும் 4ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பேருந்து பயணக் கட்டணத்தில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, பேருந்து பயணக் கட்டணம் 0.55 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் புதிய பேருந்து கட்டண திருத்தத்துக்கு அமைய, ஆரம்ப பேருந்து பயணக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த கட்டணத் திருத்தத்துக்கு அமைய, 2.5 சதவீதத்தால் பேருந்து பயணக் கட்டணம் திருத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், 0.55 சதவீதத்தால் மாத்திரம் பேருந்து பயணக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஆரம்ப பேருந்து பயணக் கட்டணமாக 27 ரூபாய் அறவிடப்படவுள்ளது.
இதேவேளை பேருந்து கட்டணத்தில் 2.5 வீத குறைப்பு இடம்பெற கூடாது என்பதற்காகவா டீசலின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது என்றும், அனைத்து வழிகளிலும் அரசிற்கே வருமானம் செல்வதாகவம், இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.