ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், Clean Sri Lanka என்பது நாட்டில் உள்ள அனைவரினதும் வாழ்க்கை முறையாக (lifestyle) மாற வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அண்மையில் தெரிவித்தார்.
Clean Sri Lanka என்பது வெறுமனே சுத்தம் செய்வது மட்டுமல்ல. Clean Sri Lanka என்பது நாம் வாழும் சூழலை, நமது சிந்தனை முறை, அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளுடன் சேர்த்து தூய்மையாக வைத்திருப்பது பற்றியதாகும் என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் இன்றைய தினம் (09.07.2025) புத்தளம் மாவட்டத்தின் சகல பாடசாலைகளிலும் Clean Sri Lanka திட்டத்தை தழுவிய “க்ளீன் ஸ்கூல்” வேலைத்திட்டம் இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற்றது.
அந்த வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்திலும் குறித்த “க்ளீன் ஸ்கூல்” வேலைத்திட்டம் பாடசாலை அதிபர் ஜனாப் S.M. ஹுசைமத் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலை வளாகம் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டதுடன், குறிப்பாக டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ள பகுதிகள் இனம்காணப்பட்டு முற்றாக சுத்தம் செய்யப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் மிகவும் மும்முரமாக குறித்த சிரமதான பணியில் ஈடுபட்டதுடன், ஆரோக்கிய வாழ்வுக்கான உணவுகள் அடங்கிய பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதை பாவனையை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்குடனும், ஆரோக்கியமான வாழ்வுக்கு, சிறந்த உணவு பழக்க வழக்கங்களின் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
