சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கப் பொறுப்புக் கணக்குகள் குழுவின் (COPE) பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்காக நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட இக்குழுவினை உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் கே. மலல்கொட, ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க, அரச உடமைகள் மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டபிள்யு.எம்.சி. பண்டார ஆகியோர் குழு அங்கத்தவர்களாகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவி கணக்காய்வாளர் திருமதி ஹஸ்தி பத்திரண அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கையினை 60 நாட்களுக்குள் கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும்.