விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவு (SISU) 2024 ஆம் ஆண்டில் பெறப்பட்ட முறைப்பாடுகளில் கிரிக்கெட் தொடர்பானவை மிக அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் தொடர்பாக ஆட்ட நிர்ணயம் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு உள்ளிட்ட 9 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இவை முக்கியமாக 2024 இல் நடைபெற்ற இலங்கை பிரீமியர் லீக் மற்றும் லெஜண்ட்ஸ் கிண்ணப் போட்டிகளுடன் தொடர்புடையவை என கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் SISU மொத்தம் 27 முறைப்பாடுகளைப் பெற்றது. இதில் கிரிக்கெட், கைப்பந்து, ஹாக்கி, ஜூடோ, மேசைப்பந்து, கபடி, மற்றும் பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகள் அடங்கும்.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 6 முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும், 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 3 முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
SISU, 2019 ஆம் ஆண்டு 24 ஆம் எண் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டத்தின் பிரிவு 21 இன் கீழ் நிறுவப்பட்டது.
இப்பிரிவு, விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரிப்பது, போட்டிகளை கண்காணிப்பது, விளையாட்டு வீரர்களுக்கு விழிப்புணர்வு விரிவுரைகள் நடத்துவது, சர்வதேச விளையாட்டு அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணுவது, மற்றும் ஆட்ட நிர்ணயம், ஊழல், சட்டவிரோத கையாளுதல், சட்டவிரோத பந்தயம் போன்றவற்றில் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கிய பணிகளை மேற்கொள்கிறது.
தற்போது, SISU பணிப்பாளர் இல்லாமல் செயல்படுவதாகவும், இதனால் சில குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்பிரிவு சுயாதீனமானதாக இருப்பதால், பதில் பணிப்பாளரை நியமிக்க சட்டத்தில் இடமில்லை. எனவே, உதவி பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உயர் அதிகாரி ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்.