நீங்கள் வானத்தில் பறவைகள் எப்போதுமே ‘V’ வடிவில் சீறிப் பாய்ந்து செல்வதைப் பார்க்கலாம். இயற்கையின் வசீகரமான காட்சிகளில் இதுவும் ஒன்று. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அதேநேரம் பறவைகள் காரணம் இல்லாமல் இதுபோல பறப்பது இல்லை. இதற்குப் பிறகு ஒரு முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கூட்டமாகப் பறக்கும் எந்தவொரு பறவையாக இருந்தாலும் அவை பெரும்பாலும் இந்த ‘V’ வடிவ அமைப்பில் தான் பறக்கும். அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் பயணிக்கும் போது இப்படித் தான் பறக்கும்.
பறவைகள் இதுபோல பறப்பது வெறும் அழகு மட்டும் இல்லை. அதற்குப் பின்னால் ஒரு முக்கியமான அறிவியலும் இருக்கவே செய்கிறது. பறவைகள் ஏன் இதுபோல பறக்கிறது என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அவர்கள் கண்டுபிடித்தது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமானதாகவே இருக்கிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் மட்டுமின்றி நாசா விஞ்ஞானிகள் கூட தங்கள் மிஷன்களுக்காக பறவைகள் இப்படி ‘V’ வடிவில் பறப்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில் நீண்ட தூரம் பறக்கும் போது இப்படி ‘V’ வடிவில் பறப்பது ஆற்றலைச் சேமிக்க உதவுகிறது என்பதைக் கண்டறிந்தனர்.. முன்னால் உள்ள பறவை காற்றின் எதிர்ப்பை அதிகமாக எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் அதன் பின்னால் உள்ள பறவைகளுக்கு இது எளிதாகிறது. அதாவது முன்னால் இருக்கும் பறவையின் இறக்கைகளால் உருவாகும் சுழல் காற்றின் மேல்நோக்கிய இழுவிசையில் பக்கவாட்டில் வரும் பறவைகள் ஈஸியாக பறக்க முடிகிறது.
மேலும், இத்தோடு V’ வடிவத்தில் பறப்பது பறவைகள் ஒன்றுக்கொன்று பார்த்துக்கொள்ளவும் உதவுகிறது. குறிப்பாக இனப்பெருக்கக் காலத்தில் பறவைக் கூட்டங்கள் பல ஆயிரம் கிமீ தூரம் பயணம் செய்யும் போது இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ‘V’ வடிவம் ஒவ்வொரு பறவையும் அதன் அருகிலுள்ள பறவையைப் பார்த்துக் கொள்ளவும், ஒன்றுடன் ஒன்று மோதுவதையும் தவிர்க்க உதவுகிறது. பறவைகள் பறப்பதை அடிப்படையாக வைத்த விமானத்தில் பல பாகங்கள் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.