பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உணவு வாங்க வரிசையில் நின்றவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர்.
இது தொடர்பாக தி கார்டியன் செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் காசா மனிதாபிமான அறக்கட்டளை என்கிற பெயரில், காசாவில் உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. நேற்று காசாவின் தெற்குப் பகுதியில் அறக்கட்டளையிலிருந்து உணவு வாங்க காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள், உணவு வாங்க காத்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
இஸ்ரேலின் படுகொலை
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் இது ஒரு ‘படுகொலை’ என்று விவரித்தனர். மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பாலஸ்தீனியர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டினர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். அறக்கட்டளையின் உதவி மையத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் உள்ள டெய்னா பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இஸ்ரேலியப் படைகளின் துப்பாக்கிச் சூடே காரணம் என்று சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஸ் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் குழந்தைகளும் அதிக அளவில் இருந்திருக்கின்றன. கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களில் 25 பேரின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்களுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல ரஃபா அருகே உணவு வழங்கும் அறக்கட்டளை அமைந்துள்ள பகுதியில் தாக்குதல் நடந்திருக்கிறது. அதில் 9 பேர் கொல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.