பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது.
எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பொறிமுறையை இலகுவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதன் ஊடாக இடைத்தரகர்களை விட உற்பத்தியாளர்களே அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து நடத்தும், வடக்கு மாகாண பனை எழுச்சி வாரத்தை முன்னிட்டு ‘எங்கள் வாழ்வியலில் பனை’ என்னும் தலைப்பிலான கண்காட்சியை, நல்லூர் முத்திரைச்சந்தியிலுள்ள சங்கிலியன் பூங்காவில் வடக்கு மாகாண ஆளுநர் இன்று செவ்வாய்க்கிழமை காலை (22.07.2025) ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் ஒவ்வொரு கண்காட்சிக் கூடங்களையும் ஆளுநர் பார்வையிட்டார்.
இங்கு உரையாற்றிய ஆளுநர்,
மில்வைக்ட் கனகராஜா சகல இடங்களிலும் பனை விதைகளை நடுகை செய்து பனையை வளர்த்த ஒருவர். பனைகள் இல்லாத தேசம் இருக்கக் கூடாது என்பதற்காக அரும்பாடுபட்டவர். அவரின் நினைவு நாள் இந்தப் பனை வாரத்தின் ஆரம்ப நாளாக உள்ளது.
எமது மாகாணத்தின், மாவட்டத்தின் சொத்தாகவுள்ள பனை வளத்தைப் பயன்படுத்தி பல்வேறு உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும். அவர்களின் உற்பத்திக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும்.

பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றன. ஆனால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அந்தளவுக்கு இல்லை. கடந்த காலங்களில் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அதைப்பயன்படுத்தி அவர்கள் முன்னேறவில்லை.
ஆனால் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் அவ்வாறில்லை. இவ்வாறு சிறப்பாகச் செயற்படுவர்களுக்கு அடுத்துவரும் ஆண்டுகளில் கூடுதலான நிதி ஒதுக்கீட்டை வழங்க முடியும், என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் பிரதிநிதியாக கௌரவ மாநகரசபை உறுப்பினர் சு.கபிலன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

