நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஏமன் ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களாகவே இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் இந்தியா அழைத்து வரப்படுவார் என்று பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்திய Global Peace Initiative அமைப்பின் தலைவர் டாக்டர் கே.ஏ. பால் தெரிவித்துள்ளார்.
ஏமன் நாட்டை சேர்ந்த மஹ்தி என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நிமிஷா பிரியா சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணத் தண்டையை விதித்திருந்தது. சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே மத்திய அரசு உட்பட பல்வேறு தரப்பும் எடுத்த முயற்சியைத் தொடர்ந்து மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாகவே இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இதில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏமன் நாட்டில் இருந்த Global Peace Initiative அமைப்பின் தலைவர் டாக்டர் கே.ஏ. பால் இது தொடர்பாக வீடியோவை வெளியிட்டுள்ளார். நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்றும் நிமிஷா பிரியா விடுதலை செய்யப்பட்டு, இந்தியா அழைத்துச் செல்லப்படுவார் என்றும் டாக்டர் கே.ஏ. பால் தெரிவித்துள்ளார். வலிமையான முயற்சிகள் மற்றும் பிரார்த்தனை காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளதாகவும் ஏமன் தலைவர்களுக்கு இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் டாக்டர் கே.ஏ. பால் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஏமன் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை. மேலும், நிமிஷா பிரியாவின் குடும்பத்தினரும் கூட இந்தச் செய்தியை உறுதி செய்யவில்லை. மேலும், பால் விளம்பர பிரியர் என்பதால் அவரை நம்ப முடியுமா என்ற கேள்வியை நிமிஷா குடும்பத்தார் முன்வைக்கிறார்கள். இதனால் நிமிஷாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதில் கேள்வி தொடர்ந்தே வருகிறது..
மஹ்தி என்பவரைக் கொன்ற குற்றச்சாட்டில் நிமிஷா பிரியா சிறையில் இருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கு ரத்தப் பணம் கொடுத்து மன்னிப்பு கோரும் முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால், உயிரிழந்த மஹ்தியின் சகோதரர் சமீபத்தில் அளித்த நேர்காணலில், நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பே இல்லை என்றும் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.