Wednesday, July 23, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமுன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் ரத்து!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் ரத்து!

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகளை இரத்து செய்வதற்கான புதிய சட்ட மூலத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவருக்கும் சிறப்புரிமை வழங்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள அனைத்து சிறப்புரிமைகளும் இதன் மூலம் இரத்து செய்யப்படும். இந்த சட்ட மூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.  பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்த பின்னரே சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய கால அவகாசம் தொடர்பில் குறிப்பிட முடியும். மிகக்குறுகிய காலத்துக்குள் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்கு எந்தவொரு நபருக்கும் சிறப்புரிமை வழங்கப்பட மாட்டாது. முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒரே மட்டத்திலேயே நடத்தப்படுவர். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு எனும் போது முன்னாள் ஜனாதிபதிகள் மாத்திரமின்றி நாட்டு பிரஜைகளும் கவனத்தில் கொள்ளப்படுவர். அனைவரது பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படும்.

1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலத்தை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’  எனும்  அரசாங்க கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டத்தை நீக்குவதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக கடந்த ஜூன் 16ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular