பின்தங்கிய பிரதேச மருத்துவமனையாகக் குறிப்பிடப்பட்ட, பெரும்பாலான மருத்துவமனைகளின் பெயர்களை நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (7) வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்த தீர்மானத்துக்கு அமைவாக, 7 கோரிக்கைகளை முன்வைத்துக் குறித்த பணிப்புறக்கணிப்பு இடம்பெற்று வருகின்றது.
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் பின்தங்கிய பிரதேச மருத்துவமனையாகக் காணப்பட்டிருந்த மருத்துவமனைகளின் பெயர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், தன்னிச்சையாக நீக்கச் சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
திருகோணமலை மாவட்டம் உட்பட, நாடு முழுவதும் 134க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்தக் காரணத்தால் மூடப்படும் அபாயத்தில் உள்ளன எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிலையில், அவசர சிகிச்சைகள் மாத்திரம் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.