பாடசாலை மாணவர்களிடையே போதை தடுப்பு மற்றும் போதை பாவனை தொடர்பான விஷேட செயலமர்வு ஒன்று புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் புத்தளம் பிரதேச சபை பிரதான முகாமையாளர் ஜனாப் A.M.A. அஸீர் தலைமையில் இன்று காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
சமூகத்தில் வேரூண்டி போயுள்ள போதை பாவனை தற்போது பாடசாலை மட்டத்திலும் பரவியுள்ளதை தடுக்கும் வகையில் புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீஸா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் பிரதேச சபையினால் ஏற்பாடு செயப்பட்டிருந்த குறித்த செயலமர்வு, சிரேஷ்ட வளவாளர் அஷ்ஷெக் மெளலவி ஆதில் ஹசன் அவர்களினால் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.
புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 9 தொடக்கம் 11 வரையான மாணவ மாணவிகளுக்கு விஷேடமாக நடத்தப்பட்ட குறித்த செயலமர்வில், போதை பாவனை மற்றும் போதை தடுப்பு தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் போதைக்கு எதிராக மாணவர்களின் பங்களிப்பு தொடர்பிலும், அதே போல் ஆசிரியர்களின் முன்னுதாரணமான செயற்பாடுகள் தொடர்பிலும் அஷ்ஷெக் மெளலவி ஆதில் ஹசன் அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், நமது நாட்டில் பெண்கள் மத்தியில் பரவி வருகின்ற போதை பாவனை கலாச்சாரம் தொடர்பிலும் கடுமையாக எச்சரிக்கப்பட்டது.
சில முஸ்லீம் நாடுகளில் பெண்கள் மத்தியில் குறித்த போதை கலாச்சாரம் பரவியுள்ளதாகவும், அதே போல் தற்போது நமது நாட்டிலும் முஸ்லீம் பெண்கள் மத்தியில் குறித்த போதை கலாச்சாரத்தை பரப்பும் நடவடிக்கையில் பல நாசகார கும்பல்கள் பின்னால் இருந்து செயற்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த நிகழ்வில், பாடசாலை அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்களான ஜனாப் ஷாஹீன் ரீஸா, லரீப் காசிம், புத்தளம் பிரதேச சபை அதிகாரிகள், ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் M.S. நாசர், மற்றும் அஷ்ஷெக் மெளலவி ஆதில் ஹசன் அவர்களின் இணைப்பாளர் ஜனாப் ஷபீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.






