கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் ஆர். டி டி. எல்லைக்கு உட்பட்ட வர்த்தக நிலையங்களின் முட்பகுதியை பிரதேச சபையினர் நேற்றைய தினம் 07.08.2025 அகற்ற முற்பட்ட போது பெரும் அமளித்துமளி ஏற்பட்டது.
எந்தவித அறிவித்தலும் வர்த்தகர்களுக்கு வழங்கப்படாத நிலையில் நேற்றைய தினம் திடீரென வர்த்தக நிலையங்களின் முற்பகுதியை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் வர்த்தகர்களால் அமைதியின்மை ஏற்பட்டதாகவும், முறையாக கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினருக்கு இப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் முற்பகுதியை அகற்றப்படுவது குறித்து தகவல் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும், அப்படி வழங்கப்பட்டிருந்தால் வர்த்தகர்கள் ஆகிய நாங்கள் அதற்கு அடிபணிவோம் எனவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பிரதேச சபையின் செயலாளரிடம் விணவியபோது;
அவ்வீதியானது ஆர் டி டி எல்லைக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதன் காரணமாகவும், இப்பகுதியில் உள்ள நடைபாதையில் உள்ள வியாபாரிகளை முற்று முழுதாக அகற்றப்பட வேண்டும் என பிரதேச சபையின் ஊடாக வர்த்தக சங்கத்தினருக்கு கடிதம் மூலம் தகவல் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

மேலும் ஒலிபெருக்கி ஊடாகவும் இரண்டு தடவைகள் நடைபாதை வியாபார இடங்களை அகற்றுமாறு ஒலிபெருக்கி மூலம் தகவல் வழங்கப்பட்டிருந்த போதிலும், அதற்கும் அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் நேற்றைய தினம் 07.08.2025 பிரதேச சபையினர் நடைபாதை வியாபார இடங்களை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த பொழுது அங்கு கூடிய சில வர்த்தகர்களால் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் பிரதேச சபையின் ஊழியர் ஒருவரையும் தாக்கம் முட்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக அப்பகுதியில் இருந்து பிரதேச சபையினர் வெளியேறியதுடன் கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு ஒன்றிணையும் பதிவு செய்துள்ளதாக கிளிநொச்சி பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
