வடக்கில் உள்ள இராணுவத்தை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை கணக்கில் எடுக்காமல் இருப்பதன் விளைவுதான் முல்லைத்தீவு முத்தையன் கட்டு சம்பவம் என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
முல்லைத்தீவில் உள்ள முத்தையன்கட்டுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்கு தகரம் தருவதாக அழைக்கப்பட்ட நான்கு இளைஞர்கள் நேற்று இராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளானதாக செய்திகள் வந்தன. பின்னர் அதில் நால்வர் தப்பியதாகவும் ஒருவரைக் காணவில்லை எனவும் ஊர் மக்கள் தெரிவித்தனர்.
அதில் காணாமலாகியிருந்த ஒருவர் இன்று சடலமாக மீட்க்கப்பட்டிருக்கின்றார் என ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
இந்த கொலையை இராணுவம் செய்துள்ளதாக மக்கள் தெரிவிப்பதாகவும், தமிழ் மக்களை ஆண்டாண்டு காலமாக கொன்ற இராணுவத்தின் கொலை வெறி இன்னும் அடங்குவதாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் இனப்படுகொலை இராணுவத்தை அகற்று என்ற எம் கோரிக்கையை கணக்கில் எடுக்காமல் இருப்பதன் விளைவு தான் இவை. இது ஒரு பாரதூரமான விடயம், அந்த இடத்து இளைஞர்களுக்கான பாதுகாப்பை உடனடியாக அரசு உறுத்திப்படுத்துவதுடன் கொலைகாரர் எனக் கூறப்படும் இராணுவத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை அகற்றப்படுகின்ற இராணுவ முகாமின் தகரங்களை பெற்றுக்கொள்ளுவதற்காக மரணித்த இளைஞரும் ஏனைய மூன்று இளைஞர்களும் முகாமிற்குள் சென்றார்கள் என்றும் அங்கு கைகலப்பு இடம்பெற்றது என்றும் சொல்லப்படுகிறது.