முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, உடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
முத்தையன்கட்டுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிற்கு தகரம் தருவதாக அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் நேற்று இராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அதில் நால்வர் தப்பியதாகவும் ஒருவரைக் காணவில்லை எனவும் ஊர் மக்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை காணாமல் போயிருந்த இளைஞசர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
குறித்த இராணுவ முகாமிற்கு சென்ற ஐவரில் மற்றுமொரு நபருக்கு முதுகு பகுதிகளில் பலத்த அடிகாயங்கள் இருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


