தற்பொழுது வடக்கு கிழக்கில் இருக்கின்ற அரசியல்வாதிகள் பலர் முன்னைய காலங்களில் போலவே தமது செயற்பாடுகளை தற்போதும் மேற்கொண்டு வருகின்றார்கள் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாக்க தெரிவித்தார்.
இன்றைய தினம் 17.08.2025 கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து பேசியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்;
தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள், முத்தையங்கட்டு பகுதியில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கேட்டு 18.08.2025 நாளைய தினம் வடக்கு கிழக்கு பகுதிகளில் கதவடைப்புக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இவர் பல பதவிகளை வகித்த காலப்பகுதியில் இதற்கு முன்னர் முத்தையங்கட்டு பகுதிக்கு சென்றுள்ளாரா, அங்குள்ள நிலைமைகள் பற்றி ஏதும் அறிந்துள்ளாரா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், தற்பொழுது அரசியல் லாபத்திற்காகவே இப்படியான சில விடயங்களை மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.

முத்தையங்கட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முற்படுத்தப்பட்டுள்ளனர். சில அரசியல்வாதிகள் இச்சம்பவத்தை தொடர்புபடுத்தி அரசியல் லாபத்தை பெறுவதற்காகவே சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும், நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இனி வரும் காலங்களில் இவர்களுக்கு தக்க பாடத்தினை மக்கள் கற்பிப்பார்கள் எனவும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாக்க தெரிவித்தார்.