“இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்காக சிறுபான்மைக் குழுக்களை வலுப்படுத்தல்” தொடர்பான கலந்துரையாடல்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
“இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்காக சிறுபான்மைக் குழுக்களை வலுப்படுத்தல்” எனும் கருப்பொருளில், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் செயற்படும் அரசியல் கட்சிகளுடன் நலிவுற்ற சிறுபான்மை குழுக்களுடைய அரசியல் பங்குபற்றுதலுக்கான சவால்கள் மற்றும் அவர்களது அரசியல் பங்குபற்றுதலுக்கான அரசியல் கட்சிகளின் பங்களிப்புகள் தொடர்பான கலந்துரையாடல் வவுனியாவில் அமைந்துள்ள ஹோட்டல் நோத்வேயில் அண்மையில் நடைபெற்றது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அமைப்பின் நிறைவேற்றுப் பணிபாளரும், சட்டத்தரணியுமான, எம்.பி.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் புத்தளம் மாவட்டத்தை பிரதிபலித்து 06 அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் உயர் மட்ட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
புத்தளம் மாவட்டம் சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி போன்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், மன்னார் மாவட்டத்தின் அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் உயர் மட்ட உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.
சிறுபான்மை சமூகங்களுக்குள் நலிவுற்ற நிலையில் வாழ்கின்ற குழுக்களை பிரதிநிதித்துவபடுத்துகின்ற பெண்கள் மற்றும் இளைஞர்களை வலுப்படுத்துவதனூடாக உள்ளக ஆட்சியில் அவர்களின் வினைத்திறன் மிக்க பங்குபற்றலை உறுதிப்படுத்தி அவர்களுடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் தாமே அடையாளப்படுத்தி குரலெழுப்புவதனூடாக, நீடித்திருக்க பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதனை இலக்காகக்கொண்டு இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நலிவுற்ற சமூகக்குழுக்களின் அரசியல் உரிமைகள் ஊக்குவிக்கப்பட்டு, பாதுகாக்கப்படல் வேண்டும், ஆட்சியில் அவர்களது சமமான பங்கேற்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும், அரசியல் உள்ளடக்கம், நியாயமான பிரதிநிதித்துவம் ஆகியவை விருப்பத்தெரிவுகளாக இல்லாமல் அவை ஜனநாயகத்தை உண்மையான அர்த்தத்தில் உணர்வதற்கு அடிப்படையானதாக அமைந்திருத்தல் வேண்டும் என்பதை வலியுத்தி பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.
நிகழ்வில் பங்குபற்றிய அரசியல் கட்சிகளின் பிரதான தலைவர்களுக்கு, அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் நடைமுறைகளில் நலிவுற்ற சமூகக்குழுக்களின் அரசியல் உள்ளடக்கம் குறித்த ஆதரவுப் பரப்புரைப்பத்திரம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
