கழிவுகளை தரம் பிரித்து தருமாறு உள்ளூராட்சி மன்றங்கள் கோரினாலும் எங்கள் மக்கள் அவ்வாறு செய்வதில்லை. எல்லாக் கழிவுகளையும் ஒன்றாகவே போடுகின்றார்கள். நீங்கள் போடுகின்றன கழிவுகளை தரம்பிரிப்பதும் மனிதர்களே என்பதை எங்கள் மக்கள் உணர்ந்து கொள்கின்றார்கள் இல்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
தரம் பிரித்து கழிவுகளை தராவிட்டால் அதை எடுக்கமாட்டோம் என்று உள்ளூராட்சி மன்றங்கள் சொன்னால், அந்தக் கழிவுகள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கட்டி, வீதியில் போட்டுவிட்டுச் செல்வார்கள். மக்கள் தாங்களாக உணர்வதன் ஊடாகவே இதைச் சீர் செய்ய முடியும் என ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண விவசாய கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், அறுவடை சஞ்சிகை வெளியீடும், உலக சுற்றாடல் தின நிகழ்வும் திருநெல்வேலியிலுள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (19.08.2025) அமைச்சின் செயலர் ச.சிவஸ்ரீ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியபோதே வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
விவசாயிகளை நாம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஏழை விவசாயிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கப்போகின்றோம். அவர்களையும் பணக்கார விவசாயிகளாக நாம் மாற்றவேண்டாமா? புதிதாகச் சிந்திக்க வேண்டும். 1970 ஆம் ஆண்டுகளில் எமது பிரதேச விவசாயிகளின் வீடுகள் கல் வீடுகளாக மாறின. தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் விவசாயிகளின் வாழ்க்கையில் இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கெளரவ ஆளுநர்;
விவசாயிகளின் உற்பத்திப்பொருட்களுக்கு நிலையான விலை கிடைப்பதில்லை என்பதே இங்கு பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. இதனால் அவர்கள் விவசாயத்தை கைவிடும் நிலைமையும் இருக்கின்றது. இதற்காகத்தான் விவசாய உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாக மாற்றுவதற்கும், ஏற்றுமதிக்குமான முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம். அதன் ஊடாக விவசாயிகளின் உற்பத்திகளுக்கு எப்போதும் நிலையான விலையை வழங்க முடியும்.
விவசாய உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் பொருட்களாக மாற்றுவதென்றால் அதற்குரிய தொழிற்சாலைகள் முதலீட்டாளர்களால் இங்கு வரவேண்டும். எதிர்காலத்தில் அவை இங்கு வரும் என நம்புகின்றேன்.
முன்னைய காலங்களில் அரசாங்க வேலைகளைவிட்டு விவசாயத்துக்குச் சென்றவர்களை எனக்குத் தெரியும். அரசாங்க வேலையை விட விவசாயத்தில் அதிகம் உழைக்க முடியும் என்ற சூழல் இருந்தது. அத்தகைய சூழலை நாம் மீண்டும் உருவாக்க வேண்டும்.
அதேபோல சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரவேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் அவர்கள் வருவதற்குரிய வகையில் எங்கள் நகரத்தின் தூய்மை இருக்கின்றதா? எங்கள் நகரம் இலங்கையிலேயே தூய்மையான நகரமாக 1970 ஆம் ஆண்டுகளில் இருந்தது. ஆனால் இன்று அதை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டோம். இதற்கு நாம் ஒவ்வொருவரும்தான் பொறுப்பு. ஒவ்வொருவரும் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதன் விளைவை நாங்கள் அனுபவிக்கின்றோம். இப்போதிருந்தாவது இதை எல்லோரும் இணைந்து மாற்றுவோம், என்றார் ஆளுநர்.

மேலும் பாடசாலை சுற்றாடல் கழகங்களின் பொறுப்பாசிரியர்களுக்கு மேலங்கிகளை வழங்கி வைத்ததுடன், பாடசாலை மாணவர்களிடையே சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி, யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் ஆகியோரும், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், விவசாயத் திணைக்கள மேலதிக மாகாணப் பணிப்பாளர், நீர்பாசனத் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பிரதிப் பணிப்பாளர், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் (PSDG) கீழ் விவசாயிகளுக்கு விதை நெல்லும், நீர்ப்பாசன இயந்திரமும், வரிசையில் விதையிடும் கருவியும், வெங்காய சேமிப்பு கொட்டகையும் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் விவசாய கிணறுகள் புனரமைப்புக்கான காசோலையும் விவசாயிகளுக்கு ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டன.