அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வியின் தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்தின் நெறிப்படுத்தலில் தெஹிவளை முஹியத்தீன் பெரிய ஜுமுஆ பள்ளிவாயலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 164 மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளில் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆலிம்கள் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜம்இய்யாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் அஷ்-ஷெய்க் சீ.எம். அப்துல் முக்ஸித் நிகழ்விற்கு வருகை தந்த பதவி தாங்குனர்களை வரவேற்கும் முகமாக வரவேற்புரையினை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் 2022 தொடக்கம் 2025 வரைக்குமான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயற்பாட்டறிக்கையினை சபையில் சமர்ப்பித்தார்.
அதனையடுத்து ஜம்இய்யாவின் பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் 2022 தொடக்கம் 2025 வரையிலான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் 03 வருடங்களுக்கான கணக்கறிக்கையினை சபையில் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அடுத்து பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை குறித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரகடனமானது நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ஏ.எச். இஹ்ஸானுதீனினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
சுமார் 500 க்கும் மேற்பட்ட கிளைப் பதவிதாங்குனர்கள் முன்னிலையில் குறித்த பிரகடனமானது வாசிக்கப்பட்டு சபையில் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதனையடுத்து தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் பற்றி சபையில் தெளிவுபடுத்தியதுடன் இப்பணிக்காக சகல விதத்திலும் பங்களிப்பாற்றிய நலன் விரும்பிகள் தொண்டு நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்றி செலுத்தி பிரார்த்தித்தார். நிகழ்வின் இறுதியாக ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி நன்றியுரையினை நிகழ்த்தினார்.
