கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளி நலன்புரிச்சங்கம் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை அழைத்து போராட்டம் மேற்கொண்ட அரசுக்கெதிரான நடவடிக்கையை விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாட்டை பதிவு செய்தார்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள பெண் நோயியல் பிரிவு வைத்திய உபகரணங்களை வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்ல முற்படுவதாக நோயாளி நலன்புரிச்சங்கம் துண்டுப்பிரசுரம் மூலம் தெரிவித்து நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்ததை அடுத்து குறித்த முறைப்பாட்டை பதிவு செய்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதானது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்;
கூட்டு சேர்ந்தவர்கள் எல்லாம் படிப்படியாக சிறை செல்லப்போவது அவர்களுக்கு தெரியும். பாதாள உலகக் குழுக்களை இயக்கியவர்கள் இவர்கள் இன்று வெளிநாடுகளில் தங்கியிருந்த நிலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் பிரிவை சுயாதீனமாக இயங்க விட்டிருக்கின்றோம். கடந்த காலம் என்றால் அரசியல் அழுத்தம் காரணமாக இவ்வாறு செய்ய மாட்டார்கள். இவர்களின் கைதுக்கு பின்பு பல அரசியல்வாதிகளின் பெயர்கள் தெரியவரவுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையுள்ளது. சட்டம் தன் கடமையை செய்யும் போது இந்த கூட்டங்கள் இல்லாமல் போய்விடும் என தெரிவித்தார்.
