ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100ஆக அதிகரித்துள்ளது. காபூல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள், வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.
ஜலாலாபாத் நகரில் இருந்து 27 கிமீ தொலைவில், 8 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற குறைவான ஆழம் கொண்ட நிலநடுக்கங்களே கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், குனார் மற்றும் நங்கஹார் மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
6 புள்ளிகள் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில் அடுத்தடுத்து பல நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பல வீடுகள் தரைமட்டமாகின. நள்ளிரவு நேரம் என்பதால் பலரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் வீடுகள் இடிந்து இடிபாடுகளில் சிக்கினர்.
இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.