சமகாலத்துக்கு ஏற்புடையதல்லாத மற்றும் அரசுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தும் 33 அரச நிறுவனங்களை இரு கட்டங்களாக மூடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் மூலோபாய ரீதியான பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக, குறித்த காலத்திற்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஒருசில அரச தொழில் முயற்சிகள் ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கங்கள் சமகாலத்துடன் ஏற்புடையதாக இன்மை மற்றும் சந்தைத் தேவைகளுடன் பொருந்தாமை போன்ற காரணங்களால் தொடர்ந்தும் பேணிச் செல்வதற்கு நடைமுறைக்குச் சாத்தியமற்றதாகவும் குறைவான நிதிச் செயலாற்றுகை போன்ற காரணங்களால் செயலிழந்து காணப்படுகின்றன.
தேசிய பொருளாதாரத்திற்கு அல்லது அரச சேவைகளை வழங்குவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகின்ற நியதிச்சட்ட நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் போன்ற பல்வேறு வகைகளுக்குரிய அரச தொழில் முயற்சிகள் அரசுக்கு செலவுச் சுமையாகத் தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்குப் பதிலாக, குறித்த நிறுவனத்தைக் கலைத்து முடிவுறுத்துவது பொருத்தமென அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட கலைத்தல் பிரிவின் மேற்பார்வையின் கீழ் தற்போது தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரச தொழில் முயற்சிகளை 02 கட்டங்களாக முறையாகக் கலைத்து முடிவுறுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.