சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த முடிவை இன்று சபாநாயகர், பாராளுமன்றத்தில் முன்வைத்த பின்னரே ரஞ்சித் மத்துமபண்டார இதனை அறிவித்தார்.
எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என்று ரஞ்சித் மத்துமபண்டார மேலும் கூறினார்.
எனினும், இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் எதிர்க்கட்சி ஒருபோதும் சபாநாயகரை தோற்கடிக்க முடியாது என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை பொருந்தாததால் மற்றும் அது உரிய முறையில் இல்லாதததாலும் அதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, நிலையியல் கட்டளைகளின் கீழ், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பிக்க சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ள சட்டமா அதிபர் மற்றும் செயலகத்தின் அறிக்கையை சபைப்படுத்துமாறு கோரினார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சபாநாயகரின் முடிவு குறித்து தனது கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு கோரினார், ஆனால் இது ஒரு விவாதம் அல்ல என்றும் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சபாநாயகர் கூறினார்.
இதனையடுத்து பாராளுமன்றத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டதுடன், குறித்த அறிவிப்பை கவனமாகப் படிக்குமாறு சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறினார்.
பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.