வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நேற்று (12) மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி தாரக நாணயக்காரவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக தவறியமையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து வெலிகம பிரதேச சபைக்குப் போட்டியிட்ட சட்டத்தரணி தாரக நாணயக்காரவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர ஆஜராகாத நிலையில் அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி தமது கட்சிக்காரர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகத் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் பிரதிவாதியின் பிணையாளர்கள் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதால், இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.