காசாவில் வாழும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் குண்டுவீசி கொல்வது இனப்படுகொலை என ஐ.நா. அறிவித்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான பிரச்சினை, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் முதல் ஹமாஸை முற்றிலுமாக அழிப்போம் எனச் சூளுரைத்த இஸ்ரேல், காசா மீது வரலாறு காணாத ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழிப் படையெடுப்பு காரணமாக காசா பெரும் அழிவைச் சந்தித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 64,871 அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 164,610 பேர் காயமடைந்துள்ளதாக காஸா சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளுமாவர். இஸ்ரேலின் முற்றுகையால் உணவு, நீர் மற்றும் மருந்துப் பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். காசாவில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தேடுதல் வேட்டைகளும், யூதக் குடியேறிகளுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதல்களும் அங்கு அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
சர்வதேச அளவில் இந்தப் போர் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்குத் தொடர்ந்து ராணுவ மற்றும் அரசியல் ஆதரவை வழங்கி வரும் நிலையில், உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்படும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து, உடனடியாகப் போர் நிறுத்தத்தைக் கோரி வருகின்றன.

தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கு தொடர்ந்துள்ளது. இதனிடையே, சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் சார்பில் சுதந்திரமான மனித உரிமை ஆணையக் குழு அமைக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவின் தலைவராக முன்னாள் மனித உரிமை ஆணையத் தலைவர் நவி பிள்ளை நியமிக்கப்பட்டார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசம் குறித்த ஐ.நா.வின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவரான நவி பிள்ளை, இன்று அதன் கண்டுபிடிப்புகள் குறித்துத் தெரிவித்தார். இதில் இஸ்ரேலியத் தலைவர்கள் – பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் – பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
“காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்க இஸ்ரேலிய அதிகாரிகளும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் இனப்படுகொலை நோக்கத்தைக் கொண்டுள்ளனர் என்று சர்வதேச விசாரணை ஆணையம் முடிவு செய்கிறது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேல் இராணுவம் தனது தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், காசா நகரவாசிகள் “கடுமையான, இடைவிடாத” குண்டுவீச்சுக்கு ஆளாகி விடியற்காலையில் இருந்து காசா முழுவதும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
