பிராந்திய கலந்துரையாடல் மற்றும் சீன-இலங்கை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை 12வது Beijing Xiangshan Forumல் பாதுகாப்புச் செயலாளர்
சீனாவில் நடைபெறும் 12வது Beijing Xiangshan Forum உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் கூட்டு உரையாடல், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
“ஒவ்வொரு நாட்டின் நியாயமான பாதுகாப்பு தேவைகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார். பிராந்தியவாதத்தை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் மற்றும் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை சீராக முன்னெடுக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
12வது Beijing Xiangshan Forum 17 முதல் 19 (செப்டம்பர்) வரை பெய்ஜிங்கில் உள்ள பெய்ஜிங்கி சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது. நான்காவது அமர்வில் “Building regional peace through dialog and consultation” என்ற தலைப்பில் இன்று (19) அவர் உரையாற்றினார்.
இந்த உயர்மட்ட பாதுகாப்பு கலந்துரையாடலுக்கு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்ததற்கு பாதுகாப்பு செயலாளர் நன்றி தெரிவித்தார். இக்கலந்துரையாடல் ஆசிய-பசுபிக் மற்றும் அதற்கு அப்பால் கலந்துரையாடலை வளர்ப்பதற்கும் அமைதியை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய தளமாக மாறியுள்ளது என்றும் கூறினார்.
அனைத்து நாடுகளின் நியாயமான பாதுகாப்பு தேவைகளை மதித்து, கலந்துரையாடல் மூலம் சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும் என்ற ஜனாதிபதி Xi Jinping அவர்களை மேற்கோள் காட்டி, உண்மையான அமைதி, மோதல்கள் இல்லாததன் மூலம் மட்டுமல்ல, கலந்துரையாடல், புரிதல் மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் மூலமும் அடையப்படுகிறது என்று பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.
இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தை எடுத்துரைத்த அவர், இந்து சமுத்திரம் ஒரு அமைதியான பிராந்தியமாகவும், ஒத்துழைப்புக்குத் திறந்ததாகவும், மோதல்களிலிருந்து விடுபட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான நாட்டின் நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். “இலங்கை அமைதி மற்றும் ஒத்துழைப்பின் பாலமாக செயல்படத் தயாராக உள்ளது, கிழக்கு மற்றும் மேற்குக்கும் இடையே இணைப்பு, வர்த்தகம் மற்றும் கலாச்சார உரையாடலை எளிதாக்குகிறது” என்று அவர் கூறினார்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீடித்த நட்பை பாதுகாப்பு செயலாளர் மேலும் வலியுறுத்தினார், நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஏழு தசாப்த கால இருதரப்பு உறவுகளையம் அவர் நினைவு கூர்ந்தார். இலங்கையின் இறையாண்மை மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் சீனாவின் உறுதியான ஆதரவையும், இராணுவப் பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அதன் பங்களிப்பையும் அவர் நினைவுபடுத்தினார்.
