இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 5.634 மில்லியன் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
பின்னர் அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
இந்தநிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றதிலிருந்து, நாட்டில் நேரடி வெளிநாட்டு முதலீடு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஆண்டில் 1.048 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெறப்பட்டதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இந்த முதலீடுகளில் 65%க்கும் அதிகமானவை முன்னணி உலகளாவிய முதலீட்டாளர்களால் செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மாத்திரம் 780 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளை இலங்கை ஈர்த்துள்ளதாகவும், இவ்வருடத்திற்கான ஒரு பில்லியன் டொலர் இலக்கை அடையமுடியும் என நம்புவதாகவும் இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.