தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்.
தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தைக் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலம் 2025.07.08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2025.09.11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தினூடாக 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கத் தேசியக் கணக்காய்வு சட்டம் திருத்தப்படுகின்றது.
அதற்கமைய, கணக்காய்வாளர் நாயகத்தினால் பரிந்துரைக்கப்படும் மிகைக்கட்டணம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்குக் கட்டமைப்பு, காலவரையறை, நடவடிக்கை முறை உள்ளடங்கலாக மிகைக் கட்டணப் பரிசீலனைக் குழுவொன்றை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை வழங்குவது இந்தத் திருத்தத்தின் பிரதான நோக்கமாகும்.
அத்துடன், மோசடி அல்லது ஊழல் தொடர்பில் செயற்படும் நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்வதற்குக் கணக்காய்வாளர் நாயகத்துக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் வருடாந்த விரிவுபடுத்தப்பட்ட முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்கும் காலம் 5 மாதத்திலிருந்து 6 மாதமாக அதிகரித்தல் பிரதான திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முதன்மை சட்டவாக்கத்தின் 42 மற்றும் 43 ஆம் பிரிவுகளின் கீழ் தவறுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கான தண்டனை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கத் தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.