ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன், காபூலில் இருந்து டில்லி வந்த விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு 94 நிமிடங்கள் பயணம் செய்த சம்பவம் பேசும் பொருளாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் காம் ஏர் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காபூலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம் டில்லி இந்திரா காந்தி விமானத்தில் தரையிறங்கிய பிறகு ஒரு சிறுவன் செய்த வேலை விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காபூலில் இருந்து புறப்பட்ட விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்ட 13 வயது ஆப்கானிஸ்தான் சிறுவன் டில்லியை வந்தடைந்தான். விசாரணையில் 13 வயது சிறுவன் காபூல் விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டது தெரியவந்தது.
பின்னர் இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு டில்லியில் தரையிறங்கியது தெரியவந்தது. விமான நிலையத்தில் பாதுகாப்பை மீறி யாருக்கும் தெரியாமல் நுழைந்த சிறுவன், ஒரு ஆர்வத்தில் இப்படி செய்துவிட்டதாக கூறியதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டுஸ் நகரைச் சேர்ந்த அந்த சிறுவன், விமான ஊழியர்களால் கைது செய்யப்பட்டு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையிடம் (CISF) ஒப்படைக்கப்பட்டான். பின்னர் அந்த சிறுவனிடம் விசாரணை நடந்தது. மதியம் 12.30 மணிக்கு டில்லியில் இருந்து புறப்பட்ட அதே விமானத்தில் சிறுவன் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சிறுவன் என்பதால் சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி விமான நிலைய அதிகாரிகள் அலட்சியம் குறித்து சமூகவலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.