1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2449/60 ஆம் இலக்க வர்த்தமானியில் 15.08.2025 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் இக்குழுவின் கூட்டம் அண்மையில் (23) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை நீடிப்பதற்கு இந்த ஒழுங்குவிதிகளின் ஊடாக பாராளுமன்றத்தின் அனுமதி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் 2024 மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் 1,000 புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வாகனங்களை சுற்றுலா அமைச்சினால் வழங்கப்படும் விசேட அனுமதிபத்திரத்தின் கீழ் மாத்திரமே இறக்குமதி செய்ய முடியும் என்பதுடன், 2025 ஜூன் 30 வரை செல்லுபடியாகும் இந்த அனுமதி சுற்றுலா மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரின் முன்மொழிவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2025 இல் இந்த வசதியை மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது 2025 செப்டம்பர் 30 வரை நீடிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.
அதற்கமைய, 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதியிலான 2449/60 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட புதிய ஒழுங்குவிதிகள், 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் அனுமதிக்காக தற்பொழுது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மானிய விலையில் போக்குவரத்துத் திறனை அதிகரிக்குமாறு தொழில்துறையினரின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு வாகன இறக்குமதி குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தற்போதைய கொள்கை கட்டமைப்பின் கீழ் அத்தகைய சலுகைகளை வழங்க முடியாது என அதிகாரிகள் விளக்கினர். மேலும், ஒரு துறையினருக்கு நிவாரணம் அளிப்பது ஏனைய தொழில்துறைகளிலும் சமநிலை மற்றும் நியாயம் பற்றிய கரிசனைகளை எழுப்பும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், சுற்றுலா அபிவிருத்தி வரியை (Tourism Development Levy – TDL) அறவிடுவதில் காணப்படும் சவால்களையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் முறையான நிறுவனங்கள் இந்த வரிக்கு பங்களித்தாலும், பல சுற்றுலா ஓய்வு விடுதிகள் மற்றும் எயார்பிஎன்பி (Airbnb) இயக்குநர்கள் இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இல்லை என்பதால் அவர்கள் பணம் செலுத்துவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இது தொழில்துறையில் சமநிலையற்ற போட்டிச் சூழலை உருவாக்கியுள்ளதுடன், சுற்றுலா அபிவிருத்திக்குக் காணப்படும் நிதியையும் குறைத்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டது.
அதற்கமைய, விரிவான பரிசீலனையைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2449/60 ஆம் இலக்க வர்த்தமானியில் 15.08.2025 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது.
