இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையில், அறிவு மாதத்தை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிதியறிவுக்கண்காட்சி இன்று காலை 8.30மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய முகாமையாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், மத்திய வங்கியின் பிராந்திய அபிவிருத்திக்கான பணிப்பாளர் சதுர ஆரியதாச உள்ளிட்டோர் கலந்து கொண்டு குறித்த கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் நிதி கல்வியறிவை மேம்படுத்தும் இலங்கை மத்திய வங்கியின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இக் கண்காட்சியில் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் (MSMEs) காட்சிக் கூடங்கள், கொழும்பு பங்கு பரிவர்த்தனை (CSE) முதலீட்டு வழிகாட்டுதல்கள், ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய (ETF) சேவைகள், கொடுகடன் தகவல் பணியக சேவைகள் (CRIB) மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டுதல்கள் என்பன இடம்பெறகின்றன.
மேலும், பார்வையாளர்களுக்கு இலங்கை நாணயங்களின் வரலாறு, அரிய மற்றும் நினைவு நாணயங்கள். நாணய அமைப்பின் வளர்ச்சி போன்றவற்றை உள்ளடக்கிய நாணய அரும்பொருட்காட்சியகமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது தனிநபர் நிதியியல் முகாமைத்துவம், வங்கிச் சேவைகள், டிஜிட்டல் வங்கி சேவைகள், நிதியியல் மோசடிகள் மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டுதல்கள் போன்றவை குறித்து பொதுமக்கள் பயனுள்ள தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தேவையான நிதிக் கல்வியறிவு மற்றும் அவற்றின் பிரயோகம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த கண்காட்சி இன்று பிற்பகல் 5.00மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


