மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டனர்.
இதில் பலர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் ஒரு குழுவை அமைத்து மக்களின் கருத்துக்களை உள்வாங்கி நல்ல தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
ஆனால், இதற்கு மாறாக, ஜனாதிபதி மக்களின் எதிர்ப்பையும் கருத்துக்களையும் மதிக்காமல், காற்றாலைத் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நேற்று முன்தினம் பணிப்புரை விடுத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று (26) இரவு 10 மணியளவில், முதற்கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை மக்கள் அமைதியாகத் தடுத்து நிறுத்த முயன்றபோதிலும், அவர்களின் எதிர்ப்பை மீறி உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டன.
தொடர்ந்து, நள்ளிரவு 12 மணியளவில் இரண்டாவது காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டபோது, பொதுமக்களும் அருட்தந்தையர்களும் வீதிகளில் இறங்கி தடுக்க முயன்றனர்.
அப்போது, பொலிஸார் பெண்கள், அருட்தந்தையர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தி, கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
அதேவேளை, போராட்டக்காரர்களைத் தடுக்க விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் காற்றாலை உதிரிபாகங்களைக் தீவுக்குள் கொண்டு சென்றனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.