பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஆதரிக்க புதிய தொழில்நுட்பங்கள்
புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஊடகவியலாளர்களுக்கான பல திறன் மேம்பாட்டுத் திட்டங்களை, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு உட்பட நவீன தொழில்நுட்பத்தால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு ஏற்ப ஊடகவியலாளர்களின் திறன்களை வளர்க்க வேண்டியிருப்பதால், அதற்கான பயிற்சி நெறிகள் மற்றும் செயலமர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
நேற்று (27) கண்டி மாவட்ட செயலகத்தில், அரசாங்க தகவல் திணைக்களத்தால் மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்பட்ட அசிதிசி பியவர கண்டி மாவட்ட ஊடக செயலமர்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஜனநாயகம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்றும், அதற்கு இணையாக, ஊடகவியலாளர்களுக்கான டிஜிட்டல் கருவிகளுக்கான அணுகல், டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவு மற்றும் அந்த தொழில்நுட்பத்தை அணுகுவதற்கான தடைகளை நீக்குதல் ஆகியவை அடுத்த ஆண்டில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களில் நுழையும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், தற்போது செயல்படும் ஊடகவியலாளர்களின் திறன்களை வளர்ப்பதன் மூலம் ஊடகத் துறையில் உள்ள குறைபாடுகளை சமாளிக்க முடியும் என்றும் அவர் கூறினார். ஊடகவியலாளர்களின் திறன்களை வளர்ப்பதற்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் பல பாடநெறிகளை நடத்துவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பாடநெறிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார குறிப்பிட்டார்.
