பொதுமக்கள் தங்கள் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வுடன் இல்லாமல் இருந்தாலும் அவர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது சுகாதார மற்றும் நல்வாழ்வு மைய ஊழியர்களின் பொறுப்பாகும்…
– சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ –
இந்த நாட்டில் வாழும் மக்கள் கண்ணியமான முறையில் சுகாதாரசேவையை எளிதில் பெற்றுக்கொள்ளகூடியவகையில் உறுதிசெய்வதற்காக, தற்போதைய அரசாங்கத்தின் சுகாதாரக்கொள்கையின் முதல் கட்டமாக சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் ஆயிரம் ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவ அமைச்சகம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.
மேலும் மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய இடத்தில் நிறுவப்படும் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள்” ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுமையம்” என்று பெயரிடப்பட்டுள்ளன. இது நாட்டின் சுகாதாரசேவையை நல்லவழியில் மாற்றி அமைக்கும் சிறந்த மாற்றத்தின் முதல் ஆரம்பமாக இது காணப்படுகிறது.
மேலும் புதிய அரசாங்கத்தின் சிறந்த திட்டமான “HEALTHY SRI LANKA” இன் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதார மையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் இரண்டாவது சுகாதார மற்றும் நல்வாழ்வு மையமான இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அத் ஓயா சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம், நேற்று (27) மதியம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.
முதல் அங்கத்துவர் பதிவு செய்யப்பட்டு, அதற்கான பதிவு அட்டை அமைச்சரால் வழங்கப்பட்டது. சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தால் வழங்கப்படும் சேவைகள் குறித்து அங்கு வந்திருந்த மக்களுக்குத் தெரிவித்த அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, நான்கு அல்லது ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான மக்களை உள்ளடக்கிய ஒரு சுகாதாரக் குழு அறிமுகப்படுத்தப்படும் என்றும், இந்த மக்கள் அந்த மையத்தால் உள்வாங்கபடுவார்கள் என்றும் பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இது ஒரு நல்வாழ்வு மையம் என்றும் தெரிவித்தார்.
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், மக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே நோய்களை குறிப்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்று அல்லாத நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு இந்த மையம் உதவும் என்றும் அங்கு கூடியிருந்த மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இதற்காக மாவட்ட மக்கள் பதிவு செய்யப்பட்டு தேவையான அடிப்படை பரிசோதனைகள் நடத்தப்படும், மேலும் இந்த மையத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவ அதிகாரியின் எல்லைக்கு அப்பாற்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு அருகிலுள்ள இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள்.
இந்த மையம் இந்த திட்டத்தின் இரண்டாவது மையம் என்றும், நாட்டில் இதுபோன்ற ஆயிரம் சுகாதார மையங்கள் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தில் எட்டு பேர் கொண்ட சுகாதார ஊழியர்கள் இணைக்கப்படுவார்கள் என்றும் மக்கள் தங்கள் உடல்நலத்தைப் பற்றி சிந்திக்காவிட்டாலும், இந்த ஊழியர்கள் அந்த மக்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த மையங்கள் மக்களுக்கு சுகாதார ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் மற்றும் ஆயுர்வேத சுகாதார சேவைகளையும் படிப்படியாகத் தொடங்கும் என்றும், உடல் உடற்பயிற்சி, யோகா, இசை சிகிச்சை போன்றவற்றை உங்கள் வாழ்க்கையுடன் பழகுவதற்கான இடமாக மாற்றும் என்றும் அவர் கூறினார்.

