கிளிநொச்சி மாவட்டத்தில் வடக்கு மாகாண உலக சுற்றுலா தின நிகழ்வினை நடாத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!
வடக்கு மாகாண உலக சுற்றுலா தின நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை (06.10.2025) கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் மாலை 4.00மணிக்கு “சுற்றுலாவும் அதன் நிலைபெறான நிலை மாற்றமும்” என்னும் தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் உலக சுற்றுலா தின நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று (03.10.2025) நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது பழைய மாவட்ட செயலகத்திலிருந்து பசுமை பூங்கா வரையிலான நடைபவனி ஒழுங்குகள், பல்வேறு கலை நிகழ்வுகள், காட்சிக்கூடங்கள், மேடை ஒழுங்கமைப்பு, ஒலி – ஒளி அமைப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடி முடிவுகள் எட்டப்பட்டன.
இக் கலந்துரையாடவில் வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் பணிப்பாளர் வை.யசோதா, கிளிநொச்சி மாவட்ட சமர்த்திப் பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளருமான எஸ்.மோகனபவன், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச சபை செயலாளர் த.ஞானராஜ், வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள், கரைச்சி பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள், துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.