புத்தளம் மாவட்டத்தில் யானைகள் மற்றும் மனித மோதலை தடுப்பது தொடர்பான விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று 03.10.2025 புத்தளம் மாவட்ட செயலாளர் Y.I.M. சில்வா தலைமையில் புத்தளம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த மாவட்டத்தில் காட்டு யானை மற்றும் மனித மோதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதை தடுக்கும் நோக்கில் குறித்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காட்டு யானைகள் மற்றும் மனித மோதல்களில் இதுவரை சுமார் 300 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், 150 இற்கும் அதிகமான மனித உயிர்கள் காவு கொல்லப்பட்டுள்ளதாக சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார்.
காட்டு யானைகளுக்கு தேவையான நீர் மற்றும் உணவு பற்றாக்குறையின் காரணமாகவே காட்டு யானைகள் கிராமங்களுக்குள் ஊடுருவுவதாகவும், அதனை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வருடத்திற்கு சுமார் 8 மாதங்கள் வரை காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்த சுற்றாடல் பிரதி அமைச்சர், யானை மனித மோதல்களினால் ஏற்படும் உயிரிழப்புக்களை தடுப்பதே பிரதான நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.
காட்டு யானைகள் கிராமப்புறங்களுக்குள் பிரவேசிப்பதை தடுக்க, காட்டுப்பகுதிக்குள் சுமார் 15 குளங்கள் புனரமைக்கப்பட இருப்பதாக புத்தளம் பிராந்திய வனத்துறை பணிப்பாளர் கமால் தென்னகோன் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சுமார் 10 ஆயிரம் தென்னங்கன்றுகள் காட்டு யானைகளின் தாக்குதலினால் முற்றாக சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான தாக்கங்களை கட்டுப்படுத்த புத்தளம் மாவட்டத்தில் இதுவரை சுமார் 370 கி.மீ தூரத்திற்கு காட்டு யானைகளுக்கான பாதுகாப்பான மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை புத்தளம், குருநாகல், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்கள் காட்டு யானைகளின் அதிக அச்சறுத்தல் இருக்கும் முக்கிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
காட்டு யானைகள் மற்றும் மனித மோதல்களை தடுக்கும் நோக்கில், வனத்துறைக்கு 100 கெப் ரக வண்டிகளும், 150 மோட்டார் சைக்கிள்களும் கொள்முதல் செய்ய அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஏனைய அரச நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

