இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த வெஸ்ட் அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. எனினும், இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 286 ரன்கள் முன்னிலையுடன் 448/5 ரன்கள் எடுத்தது.
அபாரமாக பேட்டிங் செய்த கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா 3 பேரும் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் 18 ஆண்டுகளுக்கு பிறகு பிரத்யேக சாதனையை இந்திய அணி படைத்தது. பின்னர் 3ஆம் நாள் ஆட்டத்தை இந்தியா இன்று தொடரும் என்று எதிர்பார்த்த நிலையில், டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடங்கியது. ஆனால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சுருண்டதுபோலவே இதிலும் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்களைத் தாரை வார்த்தது. இதனால் அந்த அணி 146 ரன்களுக்குச் சுருண்டது.
இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக அலிக் அதான்ஷ் 38 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்களையும் முகமது சிராஜ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.