08 கோடியில்- மூன்று மாடி, பாடசாலைக்கட்டிடம் திறந்து வைப்பு
புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு நீண்ட நாள் தேவையாக இருந்த மூன்று மாடி பாடசாலைக்கட்டிடம் இன்று (13) காலை பாடசாலையின் அதிபர் ஜனாப் SM ஹுசைமத் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால், சுமார் 08 கோடி ரூபா நிதியில் அமைக்கப்பட்ட இம் மூன்று மாடி கட்டிடத்தில், சுமார் 500ற்கும் மேற்பட்டவர்கள் அமருமளவான மண்டபம் உள்ளிட்ட வகுப்பறைகளைக்கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இம் மூன்று மாடிக் கட்டிடத்திற்கான வேலைத்திட்டம், பொருளாதார நெருக்கடி, ஆட்சி மாற்றங்கள் மற்றும் பல இன்னோரன்ன சவால்களைத்தாண்டி கட்டி முடிக்கப்பட்டு இன்று வெகு விமர்சையாக திறந்துவைக்கப்பட்டது.
குறித்த கட்டிடத்திற்கான வேலைத்திட்டம் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சி மாற்றம் காரணமாக இடை நடுவே கைவிடப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் விஷேட நிதி ஒதுக்கீட்டின் மூலமே நிர்மாணப்பணிகள் நிறைவுபெற்றன.
உள்நாட்டு யுத்தம் காரணமாக புத்தளம் பகுதிக்கு இடம்பெயர்ந்த வட மாகாண மக்கள் கல்வி மீதுகொண்ட ஆர்வத்தையும், அவர்களின் பெண் பிள்ளைகள் கல்விக்காக செயற்பட்ட விதத்தையும் பார்த்தே புத்தளத்தில் உள்ள ஏனைய பெண் பிள்ளைகளும் கல்வியில் சாதிக்க முன்வந்தார்கள் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் தனது உரையில் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் சேவைகளை வெகுவாக பாராட்டிப் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் பைசல், ஆரம்ப காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அரசியல் செயற்பாட்டுக்கு புத்தளத்தில் தாம் முன் நின்று பாடுபட்டதாகவும் நினைவுகூர்ந்தார்.
புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு மூன்று மாடிக் கட்டிடமே தேவை என அதற்கு அயராது பாடுபட்டு, அதனை செய்தி காட்டிய EPIO அமைப்பிற்கு தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அல்ஹாஜ் நூர்தீன் மஷூர் அவர்களுக்கும் தனக்கும் இரு வேறு அரசியல் பாதைகள் இருந்தாலும், ஊர் மக்களுக்கான அபிவிருத்தி விடயங்களில் தாம் இருவரும் ஒரே கொள்கைகளை கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக தங்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், தனிப்பட்ட ரீதியில் ஒரு சிறந்த உறவு இருந்ததாகக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் அல்ஹாஜ் நூர்தீன் மஷூர் அவர்கள் வன்னி மக்களுக்கு செய்த சேவைகளை நினைவுகூர்ந்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வுக்கு, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹமம்து பைஷல், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளருமான தாஹீர், புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் ரதிக மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தளம் கல்வி வலய அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு, மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

















