அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில், உயர்தர பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு இன்று (15) புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கெளரவிப்பு நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான MTM தாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
புத்தளம் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் உயர்தர பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களும், சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற சுமார் 158 மாணவர்களும் இதன்போது கெளரவிக்கப்பட்டனர்.
குறித்த கல்வி வலயத்தில் அதிகப்படியாக புத்தளம் பாத்திமா கல்லூரியைச் சேர்ந்த 29 மாணவர்கள் 9A பெற்று நினைவுச்சின்னங்களை பெற்றுக்கொண்டனர்.
குறித்த நிகழ்வில் கெளரவிக்கப்பட்ட மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும், பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக புத்தளம் மாநகர சபை முதல்வர் ரின்சாத் அஹமத், துணை முதல்வர் முஹம்மது நுஸ்கி, புத்தளம் பிரதேச சபை தவிசாளர் ரதிக சஞ்சீவ, கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருடன் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.












