நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் உள்ள பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர் மழையுடன் அடிக்கடி பனிமூட்டமும் காணப்படுவதால், வளைவுகள் நிறைந்த மலைநாட்டு வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள், வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து, மெதுவாகப் பயணிப்பதன் மூலம் வீதி விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் கலகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவல, தியகல, வட்டவளை, ஹட்டன் ஆகிய பகுதிகளிலும், ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளயார், தலவாக்கலை, ரதல்ல, நானுஓயா ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி பனிமூட்டம் காணப்படுகிறது.
மேலும், இவ்வீதிகளில் பல இடங்களில் மண் திட்டுகள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், மண்சரிவு அபாயமும் நிலவுகிறது.
எனவே, இந்த வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய மலைநாட்டின் நீரேந்து பிரதேசங்களில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
விமலசுரேந்திர, காசல்ரி, லக்ஸபான, நவலக்ஸபான, கெனியோன், மவுசாக்கலை, மேல்கொத்மலை, பொல்பிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
மழைவீழ்ச்சி மேலும் அதிகரித்தால், நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் எந்நேரமும் திறக்கப்படலாம் என்பதால், நீர்த்தேக்கங்களுக்கு கீழே உள்ள ஆறுகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொறுப்பு பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


