குர்ஆன் மதரஸா வகுப்புக்களை மேற்கொள்ளும் முஅல்லிம் மற்றும் முஅல்லிமாக்களுக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரத் துறையினால் (DMRCA) இன்று நடத்தப்பட்டது.
பதிவுசெய்யப்பட்ட குர்ஆன் மதரஸாக்களின் முஅல்லிம் மற்றும் முஅல்லிமாக்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி கருத்தரங்கு இன்று (29) புத்தளம் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தல் வெற்றிகரமாக நடைபெற்றது.
முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனாப் எம்.எஸ்.எம். நவாஸின் வழிகாட்டுதலின் கீழ், உதவிப் பணிப்பாளர் ஜனாப் என். நிலோஃபர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
குர்ஆன் மத்ரஸாக்கள் தற்போது உயிரோட்டம் குறைந்து காணப்படுவதற்கான காரணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், மார்க்கக்கல்வியில் குர்ஆன் மத்ரஸாக்களின் முக்கியத்துவம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
செயலமர்வில் கலந்துகொண்ட உலமாக்கள், தாம் கடமையாற்றும் குர்ஆன் மதரஸாக்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டினார்.
மேலும் குர்ஆன் மத்ரஸாக்களின் பலவீனத்திற்கு உலகக்கல்விக்கு கொடுக்கும் முக்கியம் தொடர்பிலும் உற்றுநோக்கப்பட்டது.
மேலும் குறித்த அமர்வு மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தப்பட்டு நடைபெற்றது.
- தரமான குர்ஆன் மதரஸா அமைப்பை நோக்கி
- குர்ஆன் ஆசிரியர்களின் பங்கு மற்றும் பொறுப்பைப் புரிந்துகொள்வது
- குர்ஆன் மற்றும் மாணவர்களுடன் ஆன்மீக தொடர்பை உருவாக்குதல்
இந்த வளமான கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இலங்கையில் இஸ்லாமிய கல்வியின் வளர்ச்சிக்கான இந்த முக்கியமான முயற்சியின் வெற்றிக்கு அனைவரினதும் பங்களிப்புகள் தொடர்பில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார திணைக்களத்தின் அதிகாரிகள், புத்தளம் பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்கள் கலந்துகொண்டனர்.





