கடந்த 2024-2025 ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் பிரமாண்ட நிகழ்வு இன்று 02.11.2025 பு/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் கல்வியியலாளர்களுக்கான கெளரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் கலந்துகொண்டார்.
புத்தளம்-நாகவில்லு கிராமம் உருவாகுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு உருவாக்கித்தந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் MHM அஷ்ரப் அவர்களின் 25 வருட சிரார்த்த தினத்தை முன்னிட்டு குறித்த பரிசளிப்பு வைபவம் எருக்கலம்பிட்டி கல்வி வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2024-2025 ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த.சா/த பரீட்சை மற்றும் க.பொ. உ/த பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை மாணவர்கள் இதன்போது நினைவுச்சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தி சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொடுக்க அயராது பாடுபட்ட ஆசிரியர்களும் இதன்போது கெளரவிக்கப்பட்டனர்.
நாகவில்லு கிராமத்தின் உருவாக்கத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் MHM அஷ்ரப் அவர்களின் பங்களிப்பு குறித்து நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்துகொண்ட புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் லரீப் காசிம் நினைவுபடுத்தினார்.
மேலும் நாகவில்லு கிராமத்தின் தற்போதைய அத்தியாவசிய தேவைப்பாடுகள் குறித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதேவேளை கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாகவில்லு கிராமத்தின் பெண்கள் அதிகளவில் தமக்கு வாக்களித்ததாகவும், நாகவில்லு கிராமத்தின் அபிவிருத்திக்கு தாம் முடியுமான பங்களிப்பை வழங்குவதாகவும் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் தெரிவித்தார்.
நாகவில்லு கிராமத்தின் வைத்தியசாலை வீதியை புனரமைக்க தாம் முயற்சி செய்வதாகவும், நாகவில்லு வைத்தியசாலையில் பல் வைத்திய பிரிவை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில், புத்தளம் வலயக்கல்வி பணிமனையின் பிரதிப்பணிப்பாளர் திருமதி அஸ்கா, புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையின் அதிபர் ஜனாப் SM ஹுஸைமத் மற்றும் புத்தளம் எருக்கலம்பிட்டி பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் கலாநிதி நிஹ்மத்துல்லாஹ் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர் உற்பட பாடசாலை சமூகம், உலமாக்கள், கல்விமான்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




















