கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நிதி அமைச்சர் என்ற ரீதியில் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (07) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
இன்று பி.ப 1.30 மணிக்கு வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டுடன் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து சம்பிரதாய பூர்வமாக படைக்கல சேவிதர் அழைத்துவர சபா மண்டபத்திற்கு வருகை தந்ததுடன் பி.ப 5.50 மணிவரை வரவுசெலவுத்திட்ட உரையை முன்வைத்தார்.
புதிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத்திட்டமான இது சுதந்திர இலங்கையின் 80வது வரவுசெலவுத்திட்டமாக வரலாற்றில் பதிவாகிறது. வெளிநாட்டுத் தூதுவர்கள், ஆளுநர்கள், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், நீதிபதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 6 நாட்கள் இடம்பெறும். அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.
இதனைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 3 சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக 17 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறும்.
இன்றைய வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் ஒரே பார்வையில்..
ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மூலம் உயர் வருமானம்
- புதிய தீர்வை வரிக் கொள்கையை அறிமுகம் செய்வதற்கும் , புதிய ஏற்றுமதி உற்பத்தி மற்றும் சேவை மேம்பாட்டுக்குத் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்கும் தேசிய தனிவர்த்தக கரும பீடத்தை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடன் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்தல் - 2028 ஆம் வருடத்தில் வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு முடியாத நிலை தோன்றுமென அடிப்படையற்ற கருத்துக்களை ஒருசில தரப்பினர்கள் சமூகத்திற்கு எடுத்துரைத்த வண்ணம் இருக்கின்றார்கள். 2024 ஆம் வருடத்தில் 1,674 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் தவணைப் பணமாகவும் வட்டியாகவும் செலுத்தி முடித்துள்ளோம். 2025 செப்டம்பர் மாதம் 30 ஆந் திகதியாகும்போது 1,948 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர கால பேரண்டப் பொருளாதாரப் போக்கு - எமது பொருளாதார வளர்ச்சி 2024 ஆம் வருடத்தின் முதல் அரையாண்டில் காணப்பட்ட 4.6 வீதத்திலிருந்து 2025 ஆம் வருடத்தின் சமமான காலப்பகுதியில் 4.8 வீதம்வரை அதிகரித்தது. வேலையின்மை 2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் காணப்பட்ட 4.5 வீதத்திலிருந்து 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் 3.8 வீதம் வரை வீழ்ச்சியடைந்தது.
முதலீட்டிற்கு அனுகூலமான சூழலை உருவாக்கல் - முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதற்கும், முதலீடுகளை பாதுகாப்பதற்குமாக புதிய “முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டம்” 2026 ஆண்டு முற்பகுதியில் அங்கீகரிக்கப்படும்.
இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை வலுப்படுத்தவதற்கான ஒன்றிணைந்த வேலைத் திட்டம் - கைத்தொழில் வலயங்களை உருவாக்கி அபிவிருத்தி செய்து உரிய முறையில் முகாமை செய்வதற்காக 2026 இல் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 4,000 மில்லியனிற்கு மேலதிகமாக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்குவதற்கு முன்மொழிவு.
வலதுகுறைந்த சமூகத்திற்கு உதவி செய்தல் - அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடைமுறை; அரச சேவையின் 3 சதவீதம் வலது குறைந்தோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளபோதும் இது முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எனவே, அரச சேவைக்கு மேற்குறிப்பிடப்பட்டவாறு 3 சதவீதத்தை ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- வலது குறைந்தோரை தனியார் துறையில் தொழில் ஒன்றில் ஈடுபடுத்திக் கொள்வதாயின், ரூபா 15,000 என்ற உச்ச வரம்பிற்கு கட்டுப்பட்டு ஊழியரின் சம்பளத்தில் 50 சதவீத சம்பள உதவித் தொகை 24 மாதங்கள் வரை அரசாங்கத்தினால் செலுத்துவதற்கு ரூபா 500 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிவு.
கல்வியும் பயிற்சியும் - கற்கைகளுக்கு தேவையான காகிதாதிகளை ஒவ்வொரு பிள்ளையும் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யும் நோக்குடன் 2025 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூபா 6,000 காகிதாதிகள் கொடுப்பனவுகளை 2026 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை.
- மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிள்ளையொன்றுக்கு ரூபா 5,000 கொண்ட மாதாந்த்க் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு இவ்வாண்டின் வரவு செலவுத்திட்டத்திலிருந்து ரூபா 50 மில்லியன் ஒதுக்கீடு.
- சப்பிரகமுவ, மொரட்டுவ, உருகுணை, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களின் அபிவிருத்திக்காக ரூபா 11,000 மில்லியன் ஒதுக்கீடு. இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் வசதிகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ரூபா 11,500 மில்லியன் ஒதுக்கீடு.
- உயர்வடைகின்ற வாழ்க்கைச் செலவுடன் ஈடுகொடுப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த மகாபொல மற்றும் மாணவ உதவுதொகை கொடுப்பனவுகளை 2026 இலும் ரூபா 2,500 மூலம் அதிகரிப்பதற்கு முன்மொழிவு. அதற்கமைய, மாதாந்த மகாப்பொல கொடுப்பனவு ரூபா 10,000 ஆகவும் மாணவர் உதவுதொகை கொடுப்பனவு ரூபா 9,000 ஆகவும் அதிகரிக்கப்படும். அதேபோன்று “நிபுணதா சிசுதிரிய கொடுப்பனவு” ரூபா 2,500 இனால் அதிகரிக்கப்படும்.
- தேசிய கல்விக் கல்லூரி புலமைப்பரிசில் பெறுநர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை ரூபா 2,500 இனால் அதிகரிப்பதற்கு முன்மொழிவு.
சுகாதாரம் - இரண்டாம் நிலை சுகாதாரசேவைகள் 82 தள வைத்தியசாலை (Base Hospitals) களினூடாக வழங்கப்படுகின்றன. வைத்தியசாலைகள் அநேகமானவற்றில் வசதிகள் அண்மைகாலங்களில் அபிவிருத்தி செய்யப்படவில்லை. இவ்வைத்தயசாலைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் இரண்டாம் நிலை சுகாதார சேவைகளின் தரத்தினை மேம்படுத்துவதற்கு ஐந்தாண்டு நிகழ்ச்சித்திட்டமொன்றின் முதலாவது ஆண்டனைத் தொடங்குவதற்கு ரூபா 31,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
- ரூபா 12,000 மில்லியன் செலவில் அதிக இடவசதி மற்றும் நவீன உபகரணங்களுடன் கூடிய 16 மாடி கொண்ட தேசிய இருதய பிரிவொன்றை தாபிப்பதற்குத் தேவையான தொடக்கப் பணியினை ஆரம்பிப்பதற்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு.
- மருத்துவ பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் தலசீமியா நோயாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபா 10,000 கொண்ட மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு ரூபா 250 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் - ரூபா 1,350 கொண்ட தற்போதைய நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 2026 ஜனவரியில் இருந்து தொடக்கம் ரூபா 1,550 ஆக அதிகரிப்பதற்கு முன்மொழிகின்றேன். இவ் ரூபா 1,550 தொகை சம்பளத்திற்கு மேலதிகமாக வேலைக்கு சமுகமளிப்பதை நாளாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவாக ரூபா 200 தொகையினை அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழிவு.
பிரதேச அபிவிருத்தி - இடைநிறுத்தப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களின் நிர்மாணம் மீள தொடங்கப்பட்டு முக்கிய சந்திகள் விரிவுபடுத்தப்படும். அதற்கமைய கிராமிய வீதிகளுக்காக ரூபா 24,000 மில்லியனும், கிராமிய பாலங்களுக்காக ரூபா 2,500 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கான சலுகைகள் - வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சலுகை வட்டியில் வீட்டுக் கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தப்படும். அது வட்டி மீளளிப்பிற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நிதியத்தினை பயன்படுத்தி வட்டியை மீளளிப்புச் செய்ய முன்மொழிவு. அதேபோல், வெளிநாட்டில் வேலை பார்க்கும் இலங்கையர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறைமையொன்றை அறிமுகம் செய்யப்படும்.
மனித-யானை மோதலைக் குறைத்தல் - வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயற்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான 294 வாகனங்கள் மற்றும் தொடர்பாடல் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அனுமதி.
- யானை வேலி கண்காணிப்பு மற்றும் மனித-யானை மோதலினை குறைப்பதற்காக விசேட பயிற்சி வழங்கப்பட்ட சிவில் பாதுகாப்பு சேவை அலுவலர்கள் 5,000 பேரினை வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு நிரந்தர அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கு முன்மொழிவு.
- வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.
ஊடகத்துறை மேம்பாடு - ஊடகவியலாளர்களின் திறன் அபிவிருத்திக்கு அவசியமான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உயர் கல்வி புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு மற்றும் ஊடகவாகத்திற்கு அவசியமான தொழில்நுட்ப பிரவேசத்திற்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பற்கும் ரூபா 100 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிவு.
விளையாட்டுக் கலாச்சாரத்தை உருவாக்குதல் - விளையாட்டுக் கலாச்சாரத்தை விருத்திசெய்தலானது, சமூகத்தில் ஆரோக்கியமான, ஒற்றுமையான மற்றும் “பலமான குடிமகன் – வெற்றிகரமான மக்களை” உருவாக்குகிறது. எனவே, விளையாட்டு வசதிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 1,800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக மேலும் ரூபா 800 மில்லியனை ஒதுக்க நாம் முன்மொழிவு.
- கல்முனை விளையாட்டரங்கினை நிறைவு செய்வதற்காக ரூபா 150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுக் கட்டிடத் தொகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சுயாதீனம் மற்றும் உணவுப் பாதுகாப்பு - ரூபா 500 மில்லியனுக்கும் அதிக செலவில் நிர்மாணிக்கட்டப்பட்டு, பல்வேறு தொழில்நுட்ப காரணங்களினால் செயற்படாதிருக்கும் தம்புள்ளை குளிரூட்டல் களஞ்சியசாலை, விவசாய பொருட்களுக்கான களஞ்சியமாகத் திறம்பட பயன்படுத்தப்படுதல் வேண்டும். இக்களஞ்சியமானது, சுமார் 5,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்டதாகும். இக் களஞ்சியத்தினைப் பயன்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்யவும், சூரிய சக்தி மின் முறைமையினை நிறுவவும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் ரூபா 250 மில்லியனை ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு.
- அரசாங்கம் அடையாளம் காணப்பட்ட 400 நீர்ப்பாசன முறைமைகளுக்கு நடுத்தர கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் ரூபா 4,000 மில்லியனை வழங்கவும், அதில் 100 நீர்ப்பாசன முறைமைகளை 2026 ஆண்டில் அமுல்படுத்துவதற்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.
- மில்கோ (பிரைவட்) லிமிடெட்டின் படல்கம பால் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை மீண்டும் தொடங்குவது மிகவும் முக்கியமாகும். 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படல்கம பால் தொழிற்சாலை செயற்பாடுகள் முடங்கியுள்ளதுடன், அதற்காக ஏற்கனவே சுமார் ரூபா 18,000 மில்லியன் மக்கள் பணம் செலவிடப்பட்டுள்ளது. தொழிற்சாலையின் மீதமுள்ள பணிகளை நிறைவுசெய்யத் தேவையான அடிப்படைப் பணிகளுக்கு, குறிப்பாக இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்களைத் திருத்தி உற்பத்தியைத் தொடங்குவதற்கு ரூபா 3,000 மில்லியனை ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு.
தெங்குச் செய்கையை அபிவிருத்தி செய்தல் - இலங்கையின் வருடாந்த தெங்கு உற்பத்தி சுமார் 2,800 – 3,000 மில்லியன் தேங்காய்கள் என்பதுடன் இதில் சுமார் 70 வீதம் வீட்டு நுகர்வுக்காகவும் மீதி தெங்குசார் உற்பத்திக் கைத்தொழில்களுக்காகவும் பயன்படுத்தப் படுகின்றது. எவ்வாறாயினும், தற்போதைய வருடாந்த தெங்கு உற்பத்தி வீட்டு நுகர்வுக்கு போதுமாக இருந்த போதிலும், இது கைத்தொழில் கேள்விக்கு ஏற்ற வழங்கலை நிறைவு செய்வதற்கு போதுமானதல்ல. அதனால், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கும் நீண்டகால உபாயவழியாக, தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள வடக்கு தெங்கு முக்கோண வலயத்தில் தெங்குச் செய்கையை தொடர்ந்தும் விஸ்தரிக்கும் பொருட்டு ரூபா 600 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்மொழிவு.
- பாதுகாப்பானதும் தரமானதுமான மீன்பிடி படகுகளை இயக்குவதற்குத் தேவையான உதவிகளை வழங்குதல், வினைத்திறனைக் கூட்டுதல் மற்றும் விளைச்சலுக்குப் பிந்திய சேதங்களை கட்டுப்படுத்தல் ஆகிய விடயங்கள் மீது கவனம் செலுத்திய வண்ணம், பேருவளை, அம்பலாங்கொடை, குடாவெல்ல, நில்வெல்ல உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல் என்பவற்றுக்காக ரூபா 300 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்வைக்கின்றேன்.
மேலும், மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்காக, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக ரூபா 1,000 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்வைப்பு. - விளைச்சலுக்குப் பிந்திய சேதங்களை குறைப்பதனூடாக தரமானதும் போதியதுமான மீண் விளைச்சலை பெற்றுக்கொள்வதன் மூலம் மீனவ சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிவு.
நீர்ப்பாசனக் கைத்தொழிலும் நீர்வழங்கலும் - வடக்கு மாகாணத்தின் யோதவாவியுடன் இணைந்த காணிகளில் விவசாயத்துறைக்கு ஈடுபடுத்தல், ஏற்கனவே உள்ள காணிகளின் உற்பத்தி விளைவுப் பெருக்கத்தை அதிகரித்தல், அதேபோன்று குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் மன்னார் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு பிரச்சனைக்கு தீர்வாக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பஹல மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தி கருத்திட்டம். முதலான கருத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்காக ரூபா 5,000 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது.
- அணைக்கட்டுகள் மற்றும் வாவிகளை புனரமைத்தல்: சேனாநாயக்க சமுத்திரத்தின் வாண் கதவுகளை புனரமைக்கும் பணிகளை துரிதமாக ஆரம்பித்தல் உள்ளிட்ட கல்ஓயா, இராஜாங்கனய ஓயா, ஹுறுலு வாவி, மின்னேரியா வாவி உள்ளிட்ட வாவிகள் மற்றும் அணைக்கட்டுகளின் புனரமைப்பு பணிகளுக்காக ரூபா 6,500 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது.
- சிறிய குளங்கள், வாய்க்கால்கள், அருவித்தொடர் முறைமையை மேம்படுத்துதல் மற்றும் ஏனைய புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ரூபா 8,350 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 650 குளங்கள் மற்றும் 350 கிலோமீற்றர் வாய்க்கால்கள் புனரமைப்புச் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
நகர வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தல் - வெள்ளப்பெருக்கு காரணமாக அவதியுறும் கொழும்பு, கம்பஹா, காலி, அம்பாறை, மன்னார், புத்தளம் ஆகிய நகரங்கள் சார்ந்ததாக ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலுக்கு துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. இத்திட்டத்தை தயாரிப்பதற்கும் அமுல் செய்வதற்கும் இவ் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ரூபா 250 மில்லியன் ஒதுக்கீடு.
- வளவ கங்கைக்கு மேலதிக நீரை அனுப்புவதற்கு மேலதிகமாக தற்சமயம் இரத்தினபுரி மற்றும் களுத்தறை மாவட்டங்களில் காணப்படுகின்ற வெள்ளப்பெருக்கு பிரச்சனைக்கும் பொருத்தமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கும் முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிவு.
- மாத்தறை நில்வளா கங்கைக்கு குறுக்காக 2022 ஆம் வருடத்தில் முடிக்கப்பட்ட உவர்நீர் தடுப்பு காரணமாக தற்சமயம் பல்வேறு தரப்பட்ட சிக்கல்களும் பிரச்சனைகளும் எழுந்துள்ளன. இது சம்பந்தமாக ஏற்கனவே ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. எனவே, அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்படுகின்ற தீர்வுகளை அமுல் செய்வதற்கு ரூபா 1,000 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது. அதேபோல் இவ் வெள்ள அனர்த்த்தின் காரணமாக பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் விவசாயம் செய்வதற்கு முடியாமல் போன வயல்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக ரூபா 1,200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு அவதானத்தை கட்டுப்படுத்துவதற்காக கிரான் பாலத்தையும், பொண்டுக்கள் சேனை பாலத்தையும் நிர்மாணிப்பதற்குத் தேவையான ஆரம்ப கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு ரூபா 500 மில்லியன் நிதியை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்குவதற்கு முன்மொழிவு.
குடிநீர் வழங்கலை மேம்படுத்தல் - கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி,யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் குருணாகல் முதலான மாவட்டங்களை உள்ளடக்கியதாக சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டமாக குடிநீர் வழங்கல் கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு ரூபா 85,700 மில்லியன் ஒதுக்கீடு.
பொதுப் போக்குவரத்து - “பொதுமக்கள் போக்குவரத்துச் சேவை – வினைத்திறன் மிக்க பயணமுடிவு” என்ற அரசாங்கத்தின் நீண்டகால நோக்கை அடைவதற்கு வினைத்திறன் மிக்கதும் நிலைபேறானதுமான பயணிகள் போக்குவரத்து முறைமையொன்றை ஏற்படுத்துவதே தற்போதய அரசாங்கத்தின் முதன்மை எதிர்பார்ப்பாகும். இதற்காக இவ்வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ரூபா 67,200 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது.
- பொதுப் போக்குவரத்துத் துறையை பலப்படுத்தும் பொருட்டு தூர பயணச் சேவைகளுக்காக 600 பஸ் வண்டிகள் இலங்கைப் போக்குவரத்து சபை மூலம் போக்குவரத்துக்கு ஈடுபடுத்தப்படவுள்ளது.
- ஒரு சில வீதிகளில் ஓடும் பஸ் வண்டிகளுக்கு போதிய வருமானம் கிடைக்காமை காரணமாக தனியார்துறை போக்குவரத்து சேவைகளை வழங்குவோர் தமது பஸ் வண்டிகளை அவ் வீதிகளில் செலுத்துவதை மட்டுப்படுத்துகின்றார்கள். நிலைபேறான போக்குவரத்து சேவையொன்றை வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கு யோசனை முன்வைக்கப்படுவதுடன், இடைக்காலத் தீர்வொன்றாக ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.
வீதி அபிவிருத்தி - நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பெரும்பாலான வீதி அபிவிருத்தி கருத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. மீண்டும் அவ்வீதி அபிவிருத்திக் கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு ஒட்டுமொத்த வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் 2026 ஆம் வருடத்திற்கு ரூபா 342,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- கடவத்தை – மீரிகமை வீதிப் பகுதியின் அபிவிருத்திப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2026 வருடத்திற்கு ரூபா 66,150 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக பாதுகாப்பு வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் - இலங்கை பொலிஸ் வீதி விபத்துக்கள் அறிக்கைக்க அமைய 2024 ஆம் வருடத்தில் 24,589 வீதி விபத்துக்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இதில் 2,262 உயிராபத்து விபத்துக்கள் ஆகும். இவ் விபத்துக்கள் காரணமாக 2,368 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. வீதிப் பாதுகாப்புடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் பரந்த அளவிலான வீதிப் பாதுகாப்பு வேலைத் திட்டமொன்றை அமுல் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, மேலும், ரூபா 1,000 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிவு.
நகர அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறை - யாழ்ப்பாணம், எஹெலியகொடை, மட்டக்களப்பு, சிலாபம், மாத்தறை உள்ளடங்கலாக தீவு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 10 நகரங்களின் சாத்திய வளங்களை அடையாளங்காணும் ஆரம்ப பணிக்காக ரூபா 2,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்ட அதேவேளை தேவை மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ப வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- திண்மக்கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும், பராமரிப்பதற்கும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை செயல்படுத்துவதற்காக, ரூபா 900 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
சகலருக்கும் பாதுகாப்பான உறைவிடம் - வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றினை 2026 ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், அவ்வேலைத் திட்டத்தின் கீழ், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பு.
- குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீட்டுவசதிப் பிரச்சினைகளுக்கு தீர்வாக, அடுத்த ஆண்டு முதல் “தமக்கெனதோர் இல்லம் – அழகான வாழ்க்கை” வீட்டுவசதி நிகழ்ச்சிதிட்டம் கட்டம் கட்டமாக நடைமுறைபடுத்தபடும், மேலும், அதன் கீழ் நடுத்தரக் காலத்தில் 70,000 வீடுகளைக் நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்நோக்கத்திற்காக, 2026 இல் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 7,200 மில்லியனுக்கு மேலதிகமாக மேலும் ரூபா 3,000 மில்லியன்களை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.
- அப்பிள் வத்த, மாதம்பிட்டிய, பெர்குசன் மாவத்தை, ஒபேசேகரபுர, ஸ்டேடியம்கம, கொலம்பகே மாவத்தை மற்றும் டொரிங்ரன் பிளேஸ் ஆகிய இடங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 2026 வருடத்திற்கு ரூபா 15,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
- மகறகமை மற்றும் கொட்டாவை ஆகிய இடங்களில் சுமார் 1,996 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுவரும் அதேவேளை, அதற்காக ஏற்கனவே ரூபா 6,500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வீடுகளுள் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்காகவும் வீடுகள் வழங்கப்படும்.
- இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் மத்திய, ஊவா, சபிரகமுவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் வசிக்கும் மலையக தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரூபா 4,290 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் 943 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கு ரூபா 1,305 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மண்சரிவு மற்றும் வேறு சுற்றுச்சூழல் காரணங்களால் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 9,000 கிராமப்புற மற்றும் தோட்டப்புற குடும்ப அலகுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாண்டில் 1,200 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூபா 1,000 மில்லியனுக்கு மேலதிகமாக ரூபா 2,000 மில்லியன் நிதி ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு.
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக எந்தவொரு வீடும் அற்ற குடும்பங்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 3,850 மில்லியன் ஒதுக்கீடு, ரூபா 5,000 மில்லியனாக அதிகரிக்கப்படும்.
அரச சேவைக்கான ஆட்சேர்ப்பினை முறைப்படுத்தல் - பிரதமரின் தலைமையில் தாபிக்கப்பட்டுள்ள அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பதவியணி முகாமைக்கான குழுவினூடாக மேற்கொள்ளப்பட்ட முறையான ஆய்வின் பின்னர் சுமார் 75,000 பேரை உரிய முறையின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிறுவனங்களுக்கு தேவையான வாகனங்கள்/ உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இயந்திரோபகரணங்களை பெற்றுக்கொடுத்தல் - அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வாகனங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்தின் இறுதியில் அவற்றைத் திருப்பிப் பெறும் அடிப்படையில் வழங்கப்படும் வாகனங்கள் மற்றும் இயந்திரோபகரணங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள அதேவேளை இதற்காக ஆரம்பத்தில் ரூபா 12,500 மில்லியன் ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு.
அரசாங்க நிறுவனங்களில் நிலுவையில் உள்ள நியதிச்சட்ட கொடுப்பனவுகளைத் தீர்ப்பனவுசெய்தல் - பல அரசாங்க தொழில்முயற்சிகளுக்கு பணியாளர்ளை ஆட்சேர்ப்புச் செய்யும்போது அரசியல் ஆதரவை கருத்திற்கொண்டு வேலைவாய்ப்பு வழங்கும் இடங்களாகவும் முறையான முகாமைத்துவ அல்லது நிதி ஒழுக்கம் இல்லாமல் செயற்பட்டதால் பல அரசாங்க நிறுவனங்கள் மக்களுக்கு பெரும் சுமையாக மாறி, வங்கிகளுக்கு கடன்பட்டு, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி மற்றும் வரிகளை செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
- 1. வரையறுக்கப்பட்ட இலங்கை சீனி (தனியார்) நிறுவனம்
- 2. மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை
- 3. இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம்
- 4. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
- 5. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்
- 6. தேசிய கால்நடை அபிவிருத்தி சபை
- 7. வரையறுக்கப்பட்ட எல்கடுவ பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம்
- 8. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
- 9. நோர்த் சீ நிறுவனம்
- 10. சிலோன் செரமிக்ஸ் கூட்டுத்தாபனம்
ஆகிய 10 அரசு தொழில்முயற்சிகளில் நிலுவையாக உள்ள ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம், பணிக்கொடை போன்ற நியதிச்சட்ட கொடுப்பனவுகள் மற்றும் வரிகளின் நிலுவைத் தொகையைத் தீர்ப்பனவு செய்வதற்கு ரூபா 11,000 மில்லியன் தேவைப்படுகிறது. இவ்வாறு செலுத்தப்படாத நியதிச்சட்டக் கொடுப்பனவுகளை, கட்டம் கட்டமாக செலுத்த முன்மொழியும் அதேவேளை, 2026 ஆம் ஆண்டிற்கு ரூபா 5,000 மில்லியன் ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு. - கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாதிருப்பதனால், இக் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிப்பதற்கும் அதிபர் பதவியில் பணியாற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படும் அதிபர் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிக்கவும் முன்மொழிவு.
வாகனங்கள் மீது சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டினை விதித்தல் - வாகனங்கள் விற்பனையின் போது அறவிடப்படும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு முறையாக அறவிடப்படுவதில்லை என்பது அவதானிக்கப்படுகின்றது. எனவே, வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அல்லது உற்பத்தி மற்றும் விற்னையின் போது சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டினை சேகரித்து, விற்பனைக்குப் பின்னான சந்தர்ப்பத்தில் இந்த வரியை விலக்களிக்க முன்மொழிகின்றேன். இதனை 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய தீர்வைக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் - தற்சமயம் நடைமுறையிலுள்ள 0%, 15%, 20% என்ற தீர்வை வரி விகிதங்களை, 2026 ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வருமாறு தீர்வை விகிதங்களை 0%, 10%, 20%, 30% என்றவாறு தேசிய தீர்வை கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் முன்மொழிவு.
இலங்கையின் பரந்த பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் தற்பொழுது திருப்திகரமான முன்னேற்றத்தை தொடராக இடம்பெறச் செய்கின்றது என சர்வதேச ரீதியாகப் பராட்டப்படுகின்ற இத் தருணத்தில், இலங்கை சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாகவும், உலகில் முதற் தர சுற்றுலா பயணிகள் அடைவிடமாகவும் சர்வதேச மட்டத்தில் பேர்பெற்றுள்ள தருணத்தில், உலகில் சனநாயக சுட்டிக்கு அமைவாக எமது தேசம் 15 படிகள் முன்னேற்றமடைந்துள்ள இத் தருணத்தில், உலகில் ஊழலுக்கு எதிரான செயன்முறை சிறந்த பாராட்டத்தைப் பெற்றுள்ள இத்தருணத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தை சமர்ப்பிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



