பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியன இணைந்து ஏற்பாடு
இலங்கை முழுவதிலுமுள்ள பெண் தலைமைத்துவங்களுக்கிடையிலான தொடர்புகளை உருவாக்குவதன் முதற்படியாக ‘இணைக்கும் குரல்கள்’ – பெண் தலைவர்களுக்கான பிராந்திய பரிமாற்ற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
பாராளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்கள், கல்வி மற்றும் வணிகத் துறைகளிலிருந்தான தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலுள்ள பெண் தலைவர்களை ஒன்றாக இணைக்கும் நிகழ்வாக இது அமைந்ததுடன், இங்கு அனுபவங்கள், தடைகள் மற்றும் பெண் தலைமைத்துவத்தைப் பலப்படுத்துவதற்கு அடையாளம் காணப்பட்ட நடைமுறைத் தீர்வுகள் குறித்துப் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான ஹேமாலி வீரசேகர, ஹசாரா லியனகே, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, எம்.ஏ.சி.எஸ்.சதுரி கங்கானி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான பாராளுமன்றம் மற்றும் ஊடகத்துறை நிபுணர் சதுரங்க ஹப்புஆரச்சி ஆகியோர் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவுப்படுத்தும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
நிலையான வழிகாட்டுதல் வலையமைப்பை உருவாக்குவதற்கும், வடக்கில் உள்ள பெண் தலைமைத்துவங்களிடமிருந்து முக்கிய விடயங்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்று அவற்றை உள்ளடக்கிய அறிக்கையை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை இந்தத் தளம் உருவாக்கியது.
தலைமைத்துவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கும், இலங்கை முழுவதும் உள்ளடக்கிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஆதார அடிப்படையிலான கொள்கை முடிவுகளை முன்னெடுப்பதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கு இந்த அறிக்கை உறுதுணையாக இருக்கும்.



