புத்தளம் மாவட்ட டெனிஸ் விளையாட்டு அரங்கு கடந்த (2025.11.06) புத்தளம் மாநகரத்தில், மாநகர முதல்வர் Eng ரின்சாத் அவர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
அகில இலங்கை டெனிஸ் சம்மேளனம் Sri Lanka Tennis Association (SLTA) கொழும்பு தலைநகருக்கு வெளியே உருவாக்கிய 15 வது டெனிஸ் விளையாட்டரங்கு இதுவாகும்.
குறித்த திறப்பு விழாவின் பிரதம அதிதியாக பேராசிரியர் சந்தன அபயரத்ன (அரச நிருவாக, உள்ளூராட்சி மன்ற, மாகாண சபைகள் அமைச்சர், புத்தளம் மாவட்ட பா.உ.), எம்.ஜே.எம். பைஸல் (புத்தளம் மாவட்ட பா.உ.), இக்பால் பின் இஸ்ஸாக் (தலைவர் – SLTA) ஆகியோருடன் ஸ்ரீ லங்கா இராணுவம், கடற்படை, விமானப் படை, விசேட அதிரடிப் படை, சிவில் பாதுகாப்புப் பிரிவு, பொலிஸ் ஆகியவற்றின் அதிகாரிகளும், அரச திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது, புத்தளம் மாவட்டத்தின் முதலாவது தொகுதி டெனிஸ் பயிலுனர்களான மாணவர்களுக்கும், புத்தளம் டெனிஸ் கழகத்திற்கும் (Puttalam Tennis Club – PTC) டெனிஸ் ரெக்கட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. பிரதம அதிதி அமைச்சர் சந்தன அபயரத்ண மற்றும் SLTA தலைவர் இருவருக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
சமய தலைவர்களின் ஆசிர்வாத நிகழ்வின்போது, நீலபெம்மே ஸத்தாஸீல தேரர், டிலந்த பெரேரா பாதிரியார், சிவஸ்ரீ சுந்தரராம குருக்கள் , மௌலவி முஜீப் ஸாலிஹ் ஆகியோர் சமய ஆசிர்வாதங்களை வழங்கினார்கள்.
இவ்வரங்கை புத்தளம் மாநகரில் நிறுவுவதில் தமயந்த விஜய ஸ்ரீ (பிரதி பொலிஸ் மாஅதிபர் (DIG) அவர்களின் பங்களிப்பு நன்றியுடன் நினைவுகூறத்தக்கது.
கடந்த 2025.09.25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ்வரங்கின் நிர்மாணப் பணிகள் 43 நாட்களில் நிறைவுசெய்யப்பட்டதும், இவ்வாரனதொரு அரங்கை நிருமானிப்பதற்கு ஏற்படும் செலவை விட மிகக் குறைந்த செலவில் நிர்மானித்தமையும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாகும்.
இதனை வெற்றிகரமான செயல்திட்டமாக நிறைவுசெய்வதில் முறையான திட்டமிடலும் மாநகர சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, அரச திணைக்களங்களின் பங்களிப்பு, குறிப்பாக நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கிய பொது மக்களின் அன்பளிப்பு பிரதான காரணங்களாகும்.







