ஜூட் சமந்த
கடலில் ஆபத்தை எதிர்நோக்கும் இலங்கை மீனவர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியை வழங்குமாறு புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சித்ரால் பெர்னாண்டோ இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கோரிக்கை கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சித்ரல் பெர்னாண்டோ சமீபத்தில் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் வழங்கினார். இச் சந்திப்பு இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.
அவர் விடுத்த கோரிக்கை குறித்து, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சித்ரல் பெர்னாண்டோ விளக்கமளித்தார்;
கடந்த ஜூன் மாதம், இலங்கையைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவுக்கு விஜயம் செய்தது.
அங்கு, இந்தியாவின் பெங்களூரில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட முடிந்தது. அந்த நேரத்தில், விண்வெளி பயணத்திற்கு கூடுதலாக, இந்த விண்வெளி ஆராய்ச்சி மையம் கடலில் ஆபத்தில் இருக்கும் மீனவர்களுக்கு உதவ ஒரு அமைப்பையும் இயக்குகிறது என்பதை அறிந்தோம். செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் ஆழ்கடலில் ஏற்படும் பேரழிவுகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் டிஸ்ட்ரஸ் அலர்ட் டிரான்ஸ்மிட்டர் இரண்டாம் தலைமுறை Distress (Alert transmitter – Second Generation) அமைப்பை அவர்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அறிந்தோம்.
கடந்த காலங்களில் நமது மீனவர்கள் நடுக்கடலில் பல்வேறு அபாயகர விபத்துகளைச் சந்தித்த விடயங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையில், நமது மீனவர்களுக்கு உதவ யாரும் இல்லை. எனவே, இந்திய அரசாங்கம் தற்போது மிகவும் வெற்றிகரமாக பராமரித்து வரும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப ஆதரவை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ள நினைத்தேன்.
அதன்படி, நான் இந்தக் கோரிக்கையை தற்போது வைத்தேன். கடல் மீன்கள் அதிகமாக உள்ள இடங்களைக் கண்டறிய இந்தியா பயன்படுத்தும் NAVIC தொழில்நுட்ப மென்பொருளை இந்த நாட்டின் மீனவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
எனது இரண்டு கோரிக்கைகளுக்கும் இந்திய உயர் ஸ்தானிகரிடமிருந்து வெற்றிகரமான பதில்கள் கிடைத்தன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சித்ரல் பெர்னாண்டோ தெரிவித்தார்.


