வடக்கு மாகாணத்தை ஒரு வரைபடப் பகுதி மட்டுமல்லாமல், ஒவ்வொரு சுற்றுலாவிக்கும், பார்வையாளருக்கும் துடிப்பான, செழிப்பான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
‘வடக்கு இலங்கையை புதிதாய் கண்டறிதல்: இளைஞர்களுக்கு அதிகாரமளித்து புதிய சுற்றுலா அடையாளத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் ஏற்பாடு செய்த பயிற்சி நெறியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (13.11.2025) யாழ்ப்பாணத்தில் உள்ள ‘நோர்த் கேர்ட்’ ஹொட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் உரையாற்றியபோது மேலும் கூறியதாவது:
வடக்கு மாகாணம் என்பது ஆழமான வரலாறு, மீள்தன்மை மற்றும் தனித்துவமான அழகு கொண்ட நிலம். ஆனால் நீண்ட காலமாக சுற்றுலாவில் அதன் கதை ஓரளவு மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்களே அதன் அடுத்த அத்தியாயத்தை எழுத வேண்டிய நேரம் இது.
சுற்றுலா என்பது கடற்கரை மற்றும் வனவிலங்குகளைத் தாண்டி, வடக்கு மாகாணத்தின் ஆன்மாவையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்த வேண்டும். நல்லூர் கந்தசாமி கோவில், யாழ்ப்பாணக் கோட்டை, இங்குள்ள மக்களின் சமையல் பாரம்பரியம், விருந்தோம்பல் இவை அனைத்தும் வடக்கின் உண்மையான அடையாளங்களின் உதாரணங்கள்.
இளைஞர்கள் தங்கள் அறிவு, திறன் மற்றும் புதுமை மூலம் வடக்கின் உண்மையான சுற்றுலா அனுபவத்தை உருவாக்க வேண்டும். நாளைய சுற்றுலா ஹோட்டல்களைப் பற்றியது மட்டும் அல்ல் இது டிஜிட்டல் கருவிகள், நிலையான நடைமுறைகள் மற்றும் சமூக நன்மை பற்றியது.
வடக்கு மாகாணத்துக்கு தனித்துவமான, நிலையான மற்றும் உண்மையிலேயே உள்ளூர் அடையாளத்தை உருவாக்குவது இளைஞர்களின் கைகளிலேயே உள்ளது. அரசாங்கம், தொழில்துறையினர் தளத்தை உருவாக்கலாம், ஆனால் வடக்கு சுற்றுலாவின் வெற்றியை இயக்குவது உங்கள் ஆர்வமும் தொழில்முறையும்தான். வாய்ப்புகள் உங்களிடம் வந்து சேரும் வரை காத்திருக்காதீர்கள் — அவற்றை உருவாக்குங்கள், என்றார் ஆளுநர்.
அதேநேரம், ஆளுநர் யாழ்ப்பாண நகரத்தின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தினார்.
‘யாழ்ப்பாணம் சுற்றுலாவுக்கான சிறந்த இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நகரை சுத்தமாக வைத்திருக்க மக்களும் பங்களிக்க வேண்டும். இது நமது பொறுப்பு,’ என அவர் கூறினார். வடக்கு மாகாணத்துக்கான விமான மற்றும் கடல் போக்குவரத்து வசதிகள் விரிவடைந்து வருவதாகவும், கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான பயண நேரத்தை குறைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணியகத்தின் இயக்குநர், பொக்ஸ் ரெசோர்ட்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர், இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



