பல மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வௌியிடப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (18) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் 350 மருந்து வகைகளுக்குக் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என்றும், அந்த வர்த்தமானி அறிவித்தலைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராகச் சட்டம் அமுலாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த அறிவித்தல், தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் பதிவு செய்யப்படவுள்ள மருந்துகளுக்கும் பொருந்தும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
“நாம் சமர்ப்பித்த புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, இனிமேல் பதிவு செய்யப்படும் அனைத்து மருந்துகளின் விலையும் குறையும்.
அதன்படி, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA) இந்த வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்திய பின்னர், பதிவு செய்யப்படும் மருந்துகளின் அடிப்படையில் தான் அந்த இலக்கம் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பதிவு செய்யும் காலப்பகுதிக்கு அதிக காலம் எடுக்கப்படாது.
இன்னும் சில மாதங்களில் இலங்கையில் பயன்படுத்தப்படும் அனைத்து மருந்துகளும் இந்த விலை சூத்திரத்தின்படி தான் பதிவு செய்யப்படும்.
“வர்த்தமானி அறிவித்தலை வௌியிட்டு, எதிர்காலத்தில் அந்த விலைகள் குறித்து மக்களுக்கு அறிவிக்கவும், அதன்படி செயற்படாதவர்களுக்கு எதிராகச் சட்டத்தை அமுலாக்கவும் எதிர்பார்க்கிறோம்.” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


