மத்திய அரசாங்கம் நாங்கள் கோரும் நிதியை விடுவிப்பதற்குத் தயாராக உள்ளது. ஆனால், வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு விருப்பமின்றி, வெறும் சலுகைகளை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். இத்தகைய அதிகாரிகளை நினைத்து நான் வெட்கப்படுகிறேன், என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் விசனம் வெளியிட்டார்.
கிளிநொச்சி, புதுமுறிப்புக் கிராமத்தில் மக்கள் நலன்சார் பணிகளை ஆற்றிவரும் ‘பத்மலோக – மனிதவள சிறப்பாற்றல் நிறுவனத்தின்’ 10ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) புதுமுறிப்பு விக்னேஸ்வரா கல்லூரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நான் நிர்வாகச் சேவையில், ஆளுநராகப் பதவியேற்ற பின்னரே மாகாண நிர்வாகத்தினுள் நுழைந்தேன். மாகாண நிர்வாகம் இவ்வளவு பின்னடைவைச் சந்திக்கக் காரணம், பொறுப்பிலுள்ள சில அதிகாரிகளே. இவர்கள் பதவிகளையும் கதிரைகளையும் பிடித்து வைத்துக்கொண்டு, மக்கள் சேவையாற்றாது காலத்தை ஓட்டுகின்றனர்.
மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளை எவ்வித தயக்கமும் இன்றிப் பெற்றுக்கொள்ளும் இவர்கள், அந்த மக்களுக்குச் சேவையாற்ற மட்டும் விரும்புவதில்லை. இத்தகைய சுமைகளையும் சுமந்துகொண்டே நாம் பயணிக்க வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல கிராமங்கள் அபிவிருத்தியிலிருந்து புறக்கணிக்கப்பட்டன. ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ‘பின்தங்கிய கிராமம் என்று எதுவும் இருக்கக் கூடாது’ என்ற உறுதியான நோக்கோடு செயற்பட்டு வருகிறது. எமது மாகாணத்துக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இந்த நன்மைகள் மக்களைச் சென்றடைவதற்கு எமது அதிகாரிகளே முட்டுக்கட்டையாக இருப்பது வேதனையளிக்கிறது.
சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் எமது மக்களின் அவலநிலையை ஒரு முதலீடாகக் காட்டித் திட்டங்களைத் தீட்டி நிதியைப் பெறுகின்றன. ஆனால், அப்படிப் பெறப்படும் நிதியில் மக்களுக்கான உதவிகளை விட, அந்த நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகளுக்கே பெரும் பகுதி செலவிடப்படுகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.
மாறாக, மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து, அவர்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு, தொண்டு அடிப்படையில் பணியாற்றும் ‘மனிதவள சிறப்பாற்றல் நிறுவனம்’ போன்ற அமைப்புகளே எமக்குத் தேவை, என்றார் ஆளுநர்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலர், கிராம அலுவலர், மனித வள சிறப்பாற்றல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



